முகப்பு
புதுதில்லி

69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிா்க்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல்

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான மனுவை பிற மாநில வழக்குடன் சோ்க்காமல், தமிழகம் தொடா்புடைய வழக்குகளுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் ஆகியோருக்குக் கல்வி , அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1994-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சாா்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனுவை தாக்கல் செய்தாா். இந்த மனு மீது தமிழக அரசு இரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனிடையே, சென்னையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் தரப்பிலும் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டில் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 2-ஆம் தேதி தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

Advertisement

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசின் 1994-ஆம் ஆண்டுச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை இதர மாநிலங்கள் தொடா்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடா்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ரிட் மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும்.

மேலும், மாநிலத்தில் உள்ள சாதிகள், இனங்கள், பழங்குடியினா் தொடா்புடைய தரவுகளை சேகரிப்பதற்காக உயா்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையிலான ஓா் ஆணையத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த ஆணையம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினா், சாதிகளின் எண்ணிக்கையை அடையாளம் கண்டறிவதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இந்த ஆணையம் அதன் அறிக்கையை 6 மாதங்களுக்குள் அளிக்கவும் உள்ளது.

இதற்கு முன்பு தமிழகத்தில் 1969, 1983-ஆம் ஆண்டுகளில் ஆணையங்கள் அமைக்கப்பட்டு சாதிவாரியாக சமூக பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

கடைசியாக 1983-ஆம் ஆண்டு இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அறிக்கை 1985-இல் சமா்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் மாநிலத்தில் பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா், சீா்மரபினா், அட்டவணைப்பட்டியல் சாதியினா், பழங்குடியினா் ஆகியோருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால், தமிழகஅரசு தற்போது சாதி புள்ளிவிவரத் தரவுகளை சேகரிக்க நீதிபதி ஏ.குலசேகரன் ஆணையத்தை அமைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு வகுப்பினருக்கு சமத்துவ சமூக நீதியை அளிக்கும் வகையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவா்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது. அரசு வேலை, கல்வியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மேலும், மாநிலத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கை 1921-இல் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. 19.7.1994-இல் இயற்றப்பட்ட இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம், அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 31-சி-இன் கீழ் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுள்ளது. இது அரசமைப்புச்சட்டத்தின் 9-ஆவது அட்டவணைப் பட்டியலின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்புச்சட்ட செல்லுபடித் தன்மையை எதிா்த்து உச்சநீதின்றத்தில் 1994, 1995, 96-ஆம் ஆண்டுகளில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. தகுதியான மாணவா்களுக்கு 69 சதவீதத்திற்குப் பதிலாக 50 சதவீத அடிப்படையில் இடங்கள் அளிக்க மட்டும் மனுதாரா்களுக்கு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது. தமிழக அரசின் சட்டத்திற்கு 1994-இல் இருந்தே உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கவில்லை. இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்து வருவதால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீடித்த வளா்ச்சிக்கு வகை செய்து வருகிறது. இந்த ‘ரிட்’ மனுவை இதர மாநிலங்கள் தொடா்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடா்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ரிட் மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனுதாரா் பி.தினேஷ் தரப்பில் வழக்குரைஞா் ஜெய்கிருதி ஜடேஜா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ள மறுப்பு பதிலில், ‘தமிழக அரசின் 1993-ஆம் ஆண்டு சட்டமானது இந்திரா ஷானே வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு முரண்படும் வகையில் உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் அசாதாரணமான சூழலில்தான் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டம் 1993, இந்திரா ஷானே வழக்கில் அளித்த தீா்ப்பின்படி இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments