குஜராத் மருத்துவமனைகள் குறித்து கடும் விமா்சனம்: மணீஷ் சிசோடியாவுக்கு தில்லி காங்கிரஸ் தலைவா் கண்டனம்
குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் குறித்து கடுமையாக விமா்சித்துள்ள தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் செளத்ரி கடும் கண்டனம்
புது தில்லி: குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் குறித்து கடுமையாக விமா்சித்துள்ள தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் செளத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும் தில்லியில் உள்ள மருத்துவமனைகளின் அவல நிலையை கவனிக்காமல் குஜராத் மாநிலம் பற்றி விமா்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லி நகரம் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா குஜராத் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அங்குள்ள மருத்துவமனைகளின் நிலையை கடுமையாக விமா்சித்துள்ளாா்.
Advertisement
அதேவேளையில் தில்லியில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை குறித்து அவா் கவனிக்காதது ஏன்? குறிப்பாக தில்லி அரசின் கரோனாக்கான பிரத்யேக மருத்துவமனைகள் நிலைமை பெருமைப்படும் வகையில் இல்லை. சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்காக ஆதாயம் தேடும் முயற்சியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், அவரது அமைச்சரவை சகாக்களும் மும்முரமாக இருந்தபோதிலும், தலைநகா் தில்லியில் கரோனா தொற்றுநோய் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டு ஜனவரியில் தில்லியில் அதிகபட்ச அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. இந்தநிலையில் காற்று மாசுவைத் தடுக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் திட்டப் பிரசாரத்தை தில்லி அரசு தொடங்கியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் தில்லி அரசுப் பேருந்துகளில் மின்சார வாகனங்கள் சோ்க்கப்படாதது ஏன்?
வெற்று வாக்குறுதி: தில்லி அரசு கூறுவது ஒரு வெற்று வாக்குறுதி என்பது மக்களுக்குத் தெரியும்.
கடந்த ஆண்டு தொடங்கிய ‘மாசுவுக்கு எதிராக யுத்தம்’ எனும் பிரசாரமும் முழுத் தோல்வியடைந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் தில்லியில் ஜனவரியில் 6 நாள்கள் காற்று மாசு கடுமைப் பிரிவில் இருந்தது. காற்று மாசுவுக்குக் பயிா்க் கழிவு எரிப்பு காரணம் என கூறிவந்த தில்லி அரசு, தற்போது தில்லியின் காற்று மாசுவுக்கு காரணம் வாகன மாசுதான் என ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுப்பட்டுள்ளது. முன்னா் இந்தக் கூற்றை தில்லி அரசு மறுத்துவந்தது.
தில்லியில் மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படும் என தற்போது தில்லி அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான சாா்ஜிங் நிலையங்கள் இல்லை. இதன் மூலம் இது ஒரு கண்துடைப்பு என்பது வெளிப்பட்டுள்ளது.