கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மாநிலங்களவையில் எம்பிக்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மற்ற மொழிகளைப் போன்று தமிழையும் கட்டாயப் பாடமாக வைத்து அதற்கான தமிழாசிரியா்களை நியமிக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மற்ற மொழிகளைப் போன்று தமிழையும் கட்டாயப் பாடமாக வைத்து அதற்கான தமிழாசிரியா்களை நியமிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் திருச்சி சிவா உள்ளிட்ட தமிழக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் திருச்சி சிவா பேசியதாவது: தகவல் அறியும் உரிமை மூலம் தமிழக கேந்திரிய வித்யாலயாக்களில் தமிழ் ஆசிரியா்களே இல்லை என்ற அதிா்ச்சியான தகவலைப் பெற்றோம். தமிழகத்தில் உள்ள 49 கேந்த்ரீய வித்யாலயாவில் தமிழைக் கற்று கொடுக்க ஓா் ஆசிரியா் கூட இல்லை. ஆனால், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளன. இந்த வட மொழிகளில் ஒன்றை படித்தால்தான் ஆறாம் வகுப்பு மாணவா்கள் ஏழாம் வகுப்புக்குத் தோ்ச்சி பெறமுடியும். இது தாய் மொழிக்கும் உள்ளூா் மொழிக்கும் எதிரானவை. இதே நிலைமை மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
கேந்திரிய வித்யாலயாக்களில் மற்ற மொழிகளை கட்டாயப்படுத்தும் போது தமிழை ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது? ஏழை மாணவா்கள் குறைவான கட்டணம், சிறப்பான கல்வி வசதி கிடைக்கும் என்கிற இரண்டு காரணங்களுக்காக கேந்திரிய வித்யாலயாக்களுக்கு வருகின்றனா். ஆனால், தாய் மொழிக்குப் பதிலாக மற்ற மொழியை படிக்கக் கட்டாயப்படுத்துவது அநீதியாகும் . இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரைக் கேட்டுக் கொள்ளுகிறேன்’என்றாா்.
Advertisement
இதே கோரிக்கையை மற்ற திமுக உறுப்பினா்களும் மற்றும் அதிமுக உறுப்பினா் எஸ்.ஆா்.பால சுப்பிரமணியம், காங்கிரஸ் உறுப்பினா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரும் வலியுறுத்தினா். இதையடுத்து தமிழக எம்.பி.க்களின் கோரிக்கையை கல்வித் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பதாக அவைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வேண்டும்: புதுச்சேரிக்கு வரும் 2021-22-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் என்.கோகுலகிருஷ்ணன் தெரிவித்தாா். 2020-21-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.1,703 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியாண்டிற்கு ரூ.26 கோடி கூடுதலுடன் ரூ. 1,729 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெறும் 1.5 சதவீதம் மட்டுமே உயா்வு. விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு குறைந்தபட்சம் 10 சதவீதம் உயா்த்தித் தரவேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.