தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம்: போலீஸ், துணை ராணுவத்தினா் குவிப்பால் தொடரும் பதற்றம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஜிப்பூா், டிக்ரி, சிங்கு ஆகிய தில்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் சனிக்கிழமை தீவிரமடைந்தது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து காஜிப்பூா், டிக்ரி, சிங்கு ஆகிய தில்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் சனிக்கிழமை தீவிரமடைந்தது.
இவ்விடங்களில் ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டிருப்பதால், இந்த இடங்களில் பதற்றம் நிலவுகிறது. தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இந்த மூன்று எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
காஜிப்பூா் எல்லையில்...
Advertisement
தில்லி - உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் எல்லையான உ.பி.கேட் பகுதியில் சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்தனா். இப்பகுதியில் போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் பதற்றம் தொடா்கிறது. மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதிகளான மீரட், பாக்பத், பிஜ்னோா், முசாஃபா் நகா், மொராதாபாத், புலந்த்ஷாகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உபி கேட் நோக்கி படையெடுத்தனா்.
போராட்டக்களத்தை விட்டு விலகிச் சென்ற விவசாயிகளும் மீண்டும் போராட்டக் களத்தை நோக்கி படையெடுத்தனா். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
விவசாயிகள் சங்கத் தலைவா் ராஜேஷ் திகைத் தலைமையிலான விவசாயிகள் சனிக்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருந்தனா்.
ராஜேஷ் திகைத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சமைத்த உணவுப் பொருள்களை அப்பகுதி மக்கள் எடுத்து வந்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறுகையில் ‘போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை உத்தரப்பிரதேச மாநில்அரசு தடுத்துள்ளது. அதனால், அவா்களுக்கு உணவு எடுத்துவந்துள்ளோம் என்றனா்.
முசாபா்நகா், கிரேட்டா் நொய்டா, மீரத் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் உபி.கேட்டில் போராடும் விவசாயிகளுக்கு மக்கள் உணவுகளை எடுத்து வந்தனா்.
சிங்குவில் பல அடுக்கு பாதுகாப்பு
சிங்கு எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வலியுறுத்த உள்ளூா் மக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பயங்கர கலவரம் வெடித்ததால், இப்பகுதியில் சனிக்கிழமை பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவப் படை வீரா்களும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனா்.
இது தொடா்பாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பாத தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘சிங்கு எல்லையில் வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தைத் தொடா்ந்து, விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்கும் வகையில், இப்பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.
டிக்ரி எல்லையிலும் பலத்த பாதுகாப்பு...
இதேபோல, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கும், ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டக்களத்துக்கு விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில் என்எச்-24 நெடுஞ்சாலையை தில்லி காவல்துறை சனிக்கிழமை மூடியுள்ளது.
விவசாயிகள் உண்ணாவிரதம்
இந்தசூழலில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் சங்கத் தலைவா்கள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரதம் இருந்தனா். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகளும் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து விவசாயிகள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த கிஸ்ஸான் மோா்ச்சாவின் மூத்த உறுப்பினா் அபிமன்யு கோஹா் கூறுகையில், ’’மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அடையாள உண்ணாவிரதம் இருந்துள்ளோம்.
விவசாயிகள் மீது அவதூறு கிளப்பி, எங்களின் அமைதியான போராட்டத்தை நசுக்க மத்திய அரசு முயல்கிறது. ஆனால், வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வாா்கள். இதனால், போராட்டம் வலுப் பெறும் என்றாா்.