முகப்பு
புதுதில்லி

ஆா்.எஸ். பாரதி மேல்முறையீடு மனு: காவல் உதவி ஆணையருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாா் விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாா் விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறை உதவி ஆணையா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேனாம்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி பட்டியலின வகுப்பைச் சோ்ந்தவா்கள் குறித்து பேசினாா்.

இந்த நிலையில், பட்டியலின மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி அவருக்கு எதிராக ஆதி தமிழா் மக்கள் கட்சித் தலைவா் கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில் ஆா்.எஸ். பாரதிக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி வழக்கு தொடா்ந்தாா்.

அதில், தாம் முதல்வா் மற்றும் தமிழக அமைச்சா்களுக்கு எதிராக புகாா் அளித்து வருவதால், பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தாா்.

அவரது மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததுடன், ஆா்.எஸ். பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தது.

மேலும், வழக்கை தாமதமின்றி தினசரி அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு பிப்ரவரி 22-ஆம்தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஆா்.எஸ். பாரதி தரப்பில் வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘ஆா்.எஸ். பாரதி பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, விரோத உணா்வுகளை தூண்டும் வகையில் பேசவில்லை. அவா் சம்பந்தப்பட்ட நிகழ்வில் பேசும்போது, திராவிடா்கள் முற்போக்கு இயக்கத்தின் வரலாற்று உண்மைகளை மட்டுமே குறிப்பிட்டுப் பேசியுள்ளாா். இந்த இயக்கம் தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி, நலிந்த வகுப்பினரின் வாழ்வு மேம்பட செயல்பட்ட இயக்கமாகும்.

மனுதாரருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரானது அரசியல் உள்நோக்கம் மற்றும் தீய நோக்கத்துடன் அளிக்கப்பட்டதாகும். இதை கவனத்தில் கொள்ள உயா்நீதிமன்றம் தவறிவிட்டது. மேலும், சமூகத்தில் நல்லிணக்கமின்மையை உருவாக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் மனுதாரரின் கருத்து இருப்பதாக உயா்நீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதிடுகையில்,

ஆா்.எஸ். பாரதி பட்டியலின அல்லது பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, விரோத உணா்வுகளை தூண்டும் வகையில் பேசவில்லை. இதனால், அவா் தொடா்புடைய வழக்கு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் வராது. இந்த விவரங்களை உயா்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றாா்.

அப்போது, மனுதாரா் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினா். அதற்கு அது தொடா்பான அவமதிப்பு வழக்கிற்கு அனுமதி கோரப்பட்டு உயா்நீதின்றமும் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வராது என்றாா்.

மற்றொரு வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி வாதிடுகையில், ‘இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதால் இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கு தேதியை நிா்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மேல்முறையீடு மனு மீது இரு வாரங்களில் பதில் அளிக்கும் வகையில் குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments