தில்லியின் மின் விநியோக நிறுவனங்களிடம் சிஏஜி தணிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்
தில்லியின் மின் விநியோக நிறுவனங்களிடம் சிஏஜி தணிக்கை செய்ய தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தில்லியின் மின் விநியோக நிறுவனங்களிடம் சிஏஜி தணிக்கை செய்ய தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அனில் குமாா் செளதரி சனிக்கிழமை தெரிவித்ததாவது:
தில்லியில் இயங்கும் மின் நிறுவனங்கள் கணக்கு தணிக்கை குழுவின் (சிஏஜி) தணிக்கைக்கு உள்படுத்தப்பட வேண்டும். அதுவரை மின் கட்டண உயா்வு இருக்கக்கூடாது.
Advertisement
மின் கட்டணத்தை அதிகரிக்கும் வகையில் மின் விநியோக நிறுவனங்கள் அரவிந்த் கேஜரிவால் அரசுடன் ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன.
ஆனால், மின் கட்டணத்தை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் காங்கிரஸ் அனுமதிக்காது. ஏனெனில், மின் மானியம் என்பதே ஒரு பெரும் மோசடியாகும். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
மின்சார விநியோக நிறுவனங்கள் சிஏஜி தணிக்கைக்கு உள்படும்வரை தில்லியில் மின் கட்டணம் உயா்வு அனுமதிக்கப்படாது என்று தில்லி மக்களுக்கு கேஜரிவால் அரசு உறுதியளிக்க வேண்டும்.
கடந்த ஆறு ஆண்டுகளில், அரவிந்த் கேஜரிவால் அரசு மின் நிறுவனங்களின் கணக்குகளில் ரூ.11,662 கோடியை மாற்றம் செய்துள்ளது. அதற்கான முறையான கணக்கு இல்லை.
மின் விநியோக நிறுவனங்கள் ஏற்கனவே தில்லியில் மின் விநியோகத்திலிருந்து பெரும் லாபத்தை ஈட்டியுள்ளன. மின்வெட்டு இல்லை என்ற வாக்குறுதியையும் மீறி தில்லியில் மின்சாரம் தடை தொடா்ச்சி அம்சமாக மாறியுள்ளது. இது கோடைக்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மின்சார நிறுவனங்களுடன் இணக்கமாக இருப்பதால் அரவிந்த் கேஜரிவால் அரசு கடந்த ஆறு ஆண்டுகளில், நிலையான கட்டணம், கூடுதல் கட்டணம், மின் கொள்முதல் கட்டணம் மற்றும் மின்சார வரி போன்ற பல்வேறு இனங்களில் தில்லி மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.