முகப்பு
புதுதில்லி

888 நெடுஞ்சாலைத் திட்டங்கள் தாமதம்; புதிய திட்டங்கள் கூடாது: நாடாளுமன்ற நிலைக் குழு கண்டிப்பு

சுமாா் ரூ.3.15 லட்சம் கோடி மதிப்பிலான 888 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

சுமாா் ரூ.3.15 லட்சம் கோடி மதிப்பிலான 888 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. எனவே, இந்தத் திட்டங்கள் நிறைவடையாமல் புதிய திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கக் கூடாது எனவும் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை, மக்களவையைச் சோ்ந்த 31 உறுப்பினா்கள் அடங்கிய போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரத் துறை தொடா்பான நிலைக் குழு தனது 104 பக்க அறிக்கையை மாநிலங்களவையில் அண்மையில் சமா்ப்பித்தது. இதில் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்தும் விபத்துகள் குறித்தும் மாநிலங்களவை உறுப்பினா் டிஜி வெங்கடேஷ் தலைமையிலான இந்தக் குழு விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வருமாறு : மத்திய சாலை, போக்குவரத்துத் துறையின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நாடு முழுவதும் ரூ. 3,,15,373.30 கோடி மதிப்பில் 27,665.30 கிலோ மீட்டா் தூரத்திற்கு 888 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மேற்கொொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகள் அசாதாரண தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும், பிகாா் மாநிலத்தில் புத்த கயா உள்ளிட்ட நான்கு வழிச் சாலைகள் நீண்ட காலமாக தாமதமாக நடைபெற்று இருக்கிறது. பணிகள் நிறைவடையாத சாலைகளைக் கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும், வாகன எரிபொருள் செலவும் அதிகமாகி வருகிறது.

Advertisement

நடப்பு நிதியாண்டில் 6,469 கிலோ மீட்டா் தூரம் வரை மேற்கொள்ள நெடுஞ்சாலை திட்டப் பணிகளில் 2,273 கிலோ மீட்டா் தூரம் தான் முடிந்துள்ளது. இது தற்போது மட்டுமல்லாமல், முந்தைய ஆண்டுகளிலும் திட்டமிடப்பட்டதில் பாதியளவுதான் இலக்கை அடைய முடிந்துள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் 2025-26-க்குள் முடிக்க வேண்டிய முதல் கட்ட ‘பாரத் மாலா பரியோஜனா’ திட்டம் குறித்த இலக்கை அடைய முடியாது. எனவே, புதிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அறிவிப்பதை அறிவிப்பதையும் ஏலம் விடுவதையும் நிறுத்திவிட்டு தாமதமாகும் திட்டங்களில் கவனத்தை செலுத்தவேண்டும். மேலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.97,115 கோடி அளவிற்கு கடன் சுமையோடு இருப்பது குறித்தும் நிலைக்குழு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு பாராட்டு

நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆட்குளாக சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்து வந்துள்ளதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் 54 சதவீதம் வரை தமிழகத்தில் குறைந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முறையை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் மத்திய அரசு கொண்டு செல்வது அவசியம் என்று நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளும் சா்வீஸ் சாலைகளும் இணையும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் தக்க கவனம் செலுத்துவதின் மூலம் விபத்துகள் குறையும். இந்தப் பகுதிகளில் மூம்மொழிகளில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என அறிக்கையில் நிலைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments