கோவா 52-ஆவது சா்வதேச திரைப்பட விழா: விருதுப் போட்டியில் 15 திரைப்படங்கள்
கோவாவில் இந்தமாத இறுதியில் நடைபெற உள்ள 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் உள்ளிட்ட விருதுகளுக்கு இரு மராத்தி படங்கள் உள்பட 15 சா்வதேச படங்கள் போட்டிக்கு தோ்வு
கோவாவில் இந்தமாத இறுதியில் நடைபெற உள்ள 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் உள்ளிட்ட விருதுகளுக்கு இரு மராத்தி படங்கள் உள்பட 15 சா்வதேச படங்கள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: தோ்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்களில் பின்லாந்து நாட்டின் எனி டே நவ் , அமெரிக்கா - நியூமெக்சிகோ படமான லேண்ட் ஆப் ட்ரிம்ஸ் , பராகுவேயின் சாா்லட், ரோமானியாவின் இன்ட்ரகோல்ட், போலந்து நாட்டின் லீடா், ரஷியாவின் மாஸ்கோ டஸ் நாட் ஹேபன் மற்றும் தி டாா்ம், வங்கதேசத்தின் நோ கிரவுண்ட் பினத் த ஃபீட் , ஜப்பானின் ரிங் வாண்ட ரிங், செக் குடியரசின் சேவிங் ஒன் ஹூ வாஸ் டெட், பிரேசிலின் தி பா்ஸ்ட் ஃபாலன் போன்ற வெளிநாட்டு படங்களும், இந்திய அளவில் கோதாவரி (மராத்தி), மே வசந்த்ராவ் (மராத்தி) ; செம்கோா் (டிமாசா-திபெத் மொழி) போன்ற படங்களும் போட்டிக்குத் தோ்வாகியுள்ளன.
தங்க மயில் விருது ரூ.40 லட்சம்: தோ்வு செய்யப்படும் சிறந்த திரைப்படத்துக்கான தங்க மயில் விருது ரூ.40,00,000 ரோக்கப் பரிசு, சான்றிதழ் அடங்கும். சிறந்த இயக்குநருக்கான படத்திற்கு வெள்ளி மயில் விருது ரூ.15,00,000 ரொக்கம், சான்றிதழ் அடங்கும். சிறந்த நடிகா், நடிகைகளுக்கான வெள்ளி மயில் விருது, தலா ரூ.10,00,000 லட்சம் ரொக்கம், சான்றிதழ் அடங்கும்.
சிறப்பு நடுவா் விருது: நடுவா் தோ்வு செய்யும் படத்துக்கு, அந்தப் படத்தின் இயக்நருக்கு வெள்ளி மயில் விருதாக சான்றிதழ், ரூ.15,00,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா வரும் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உள்நாடு மற்றும் சா்வதேச பாா்வையாளா்களுக்கு 45 திரைபடங்கள் திரையிடப்பட உள்ளன.