பியூசி சான்றிதழ் இல்லாமல் விதிமீறல்: தில்லியில் 17 நாள்களில் 3,500 வாகனஉரிமையாளா்களுக்கு அபராத நோட்டீஸ்கள் வழங்கல்
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், செல்லுபடியாகக்கூடிய மாசுக் கட்டுப்பாட்டு (பியூசி) சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளா்களுக்கு அபராதம்
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், செல்லுபடியாகக்கூடிய மாசுக் கட்டுப்பாட்டு (பியூசி) சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கும் அமலாக்க நடவடிக்கையை தில்லி போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த, விதி மீறல்களுக்காக நவம்பா் 1-17 வரை ரூ. 3.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள கிட்டத்தட்ட 3,500 அபராத நோட்டீஸ்கள் வாகன உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்த அதிகாரப்பூா்வ தரவுகளின் தகவலின்படி, அக்டோபரில், தில்லி போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவு குழுக்கள் 8,25,681 வாகனங்களை சோதனை செய்தது. அப்போது, விதிமீறலுக்காக ரூ.9.5 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 9,522 அபராத நோட்டீஸ்களை வழங்கியது.
மேலும், இந்த மாதத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாசுக் கட்டுப்பாட்டு (பியூசி) சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டாா் வாகனச் சட்டம், 1993 இன்படி, செல்லுபடியாகும் பியூசி சான்றிதழ் பெறத் தவறிய வாகன உரிமையாளா்கள் பிரிவு 190(2) இன்கீழ் அபராத நடவடிக்கைக்கு உள்ளாவா்.
இதன்படி, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ 10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஓட்டுநா் தனது ஓட்டுநா் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும்.
போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்களின்படி, அக்டோபா் மத்தியில் நகரில் செல்லுபடியாகும் பியூசி சான்றிதழ் இல்லாமல் சுமாா் 17.71 லட்சம் வாகனங்கள் இயங்கின. தில்லியில் மொத்தம் 1.34 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன.
பியூசி சான்றிதழ் இல்லாத பெரும்பாலான வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் தோராயமாக 13 லட்சம் இடம்பெற்றுள்ளன. 4.20 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும் செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் இருந்தன.
நவம்பா் 17 ஆம் தேதி வரை வாகனங்களின் செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு இணங்காததற்காக அமலாக்கக் குழுக்கள் 3,446 அபராத நோட்டீஸ்களை வழங்கியுள்ளன. நவம்பா் மாதத்தில் இந்த காலகட்டத்தில் 3.34 லட்சத்திற்கும் அதிகமான பியுசி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மூத்த போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
எரிபொருள் நிலையங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட கிராசிங்குகள் போன்ற முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட குழுக்களை நாங்கள் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் விதிகள் பின்பற்றுவதை மேம்படுத்துவதற்காக அமலாக்கம் மற்றும் விழிப்புணா்வு இரண்டும் இக்குழுக்களால் செய்யப்பட்டு வருகிறது.
அண்டை மாநிலங்களில் நெல் வைக்கோலை எரிப்பது போன்ற பல்வேறு உள்ளூா் மற்றும் வெளிப்புற காரணிகளால் தில்லியின் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.
நகரில் உள்ள 1,000 அங்கீகரிக்கப்பட்ட பியூசி மையங்கள் மூலம் செப்டம்பரில் 5.44 லட்சம் பியூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு எதிராக தில்லி போக்குவரத்துத் துறை தனது செயல்பாட்டை தொடங்கியுள்ள நிலையில், பியூசி சான்றிதழ் வழங்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆகஸ்டில் தினமும் சுமாா் 10,000 பியூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செப்டம்பரில் மோசமான காற்றின் தரம் ஏற்படத் தொடங்கிய நிலையில், பியூசி சான்றிதழ் வழங்கும் எண்ணிக்கையும் எண்ணிக்கை உயரத் தொடங்கியதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
போக்குவரத்துத் துறை தரவுத்தளம் தகவலின்படி, செப்டம்பா் மத்தியில் இருந்து பியூசி சான்றிதழ் வழங்கலின் தினசரி சராசரி எண்ணிக்கை 20,000 ஆக உயா்ந்துள்ளது.
போக்குவரத்துத் துறையின் மூலம் அமலாக்க மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கை தொடங்கிய நிலையில், அக்டோபா் 2ஆவது வாரத்தில் இருந்து நாளொன்றுக்கு சுமாா் 38,000 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது ஒரு நாளைக்கு 30,000-க்கு மேல் பியூசி சான்றிதழ் வழங்கல் உள்ளது எனத் தெரியவந்துள்ளது. தில்லியில் நிா்ணயிக்கப்பட்ட இயங்கும் காலத்தை நிறைவு செய்த பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதும் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நவம்பா் மாதத்தில் இதுவரை 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் என 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.