முகப்பு
புதுதில்லி

ஆறுமுகசாமி ஆணையம் விவகாரம்: வழக்கு விசாரணை அக்.20- க்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணையை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017-இல் நியமித்திருந்தது.  இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம்,  ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.  இதைத் தொடா்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்றத்தில் 2019-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

 இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் இடைக்காலத் தடை விதித்தது.   இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செப்.23-க்கு பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நஸீா்,  கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது,  அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரிமா சுந்தரம், வழக்கு விசாரணையை சில காரணங்களுக்காக தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதற்கு தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே,  வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோா் ஆட்சேபம் தெரிவித்தனா்.

இதன் பின்னா்,  நீதிபதிகள்அமா்வு வழக்கு விசாரணையை அக்டோபா் 20-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.   இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாா் ஆஜராகி,  இந்த விவகாரத்தில் ஆணையம் பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்துவிட்டதாகவும், இன்னும் 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தாா். தமிழக அரசின் தரப்பில், ‘ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்காக செலவிட்டு வருகிறது. ஆணையம் செயல்படும் வகையில் உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments