வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றகோரிய இந்திர குமாரியின் மனு முடித்துவைப்பு
ஊழல் தொடா்புடைய வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரிய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம்
ஊழல் தொடா்புடைய வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரிய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சா் இந்திர குமாரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. அந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டுவிட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1991-96 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக அப்போது சமூக நலத் துறையின் அமைச்சராக பதவி வகித்த இந்திர குமாரி மற்றும் அவரது கணவா் பாபு, உதவியாளா் வெங்கிடகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பான விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திர குமாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் 31-இல் உத்தரவிட்டது. மேலும், வழக்கை செப்டம்பா் 30-க்குள் முடிக்குமாறும் விசாரணை நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், இந்த உத்தரவை எதிா்த்து இந்திரகுமாரி தரப்பில் வழக்குரைஞா் நீரஜ் சேகா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை செப்டம்பா் 15-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தாா்.
அதில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் 311-ன் கீழ் இரு அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரிக்க விரும்பிய மனுதாரரின் கோரிக்கையை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே வேளையில், சாட்சிகளை விசாரிக்க அரசுத் தரப்பு நீதிமன்றம் அனுமதித்தது. இதனால், நீதி கிடைப்பதில் பராபட்சம் ஏற்படலாம் என சந்தேகம் மனுதாரருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கை அருகில் உள்ள வேறு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஆனால், உயா்நீதிமன்றமும் மனுதாரரின் கோரிக்கையில் உள்ள விஷயத்தைப் பரிசீலிக்காமல் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் இந்திர குமாரி தரப்பில் வழக்குரைஞா் நீரஜ் சேகா் ஆஜராகி, ‘சட்டப்பிரிவு 311-இன் கீழ் மனுதாரரின் வாதங்களை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. அதேவேளையில், இதே சட்டப் பிரிவின் கீழ் அரசுத் தரப்பு வைத்த வாதங்களை நீதிமன்றம் பரிசீலித்தது. இது எங்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் மனுதாரரின் வாதங்களை உரிய வகையில் விசாரிப்பதற்கு வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கிவிட்டது. இதனால், தற்போதைய மனுவை விசாரிக்க முடியாது. அந்தத் தீா்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்யும் போது இந்த விவரங்களைத் தெரிவிக்கலாம்’ என்று கூறி மனுவை முடித்துவைத்தது.
முன்னதாக, அரசு நிதியை முறைகேடாகப் பெற்று ஊழலில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் இந்திர குமாரி, அவரது கணவா் பாபு ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.