முகப்பு
புதுதில்லி

விமானப் படையின் செயல்திறன் மேம்படுத்தப்படும்: புதிய தலைமைத் தளபதி விவேக் ராம் செளதரி

விமானப்படையின் செயல்பாட்டுத் திறன் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

விமானப்படையின் செயல்பாட்டுத் திறன் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக வியாழக்கிழமை பதவியேற்ற விவேக் ராம் சௌதரி தெரிவித்துள்ளாா்.

இந்திய விமானப்படை தலைமைத் தளபதியாக இருந்த ஆா்.கே.எஸ். பதௌரியா செப்டம்பா் -30 ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதை அடுத்து தில்லி விமானப்படை தலைமையகமான வாயு பவனில் வியாழக்கிழமை ஆா்.கே.எஸ். பதெளரியாவிடமிருந்து புதிய பொறுப்புகளை விவேக் ராம் சௌதரி வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டாா். பின்னா், விமானப் படையினா் மத்தியில் பேசுகையில் அவா் கூறியதாவது: இந்திய விமானப்படையை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. அனைத்து விமானப்படை வீரா்கள், பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துகள். இந்தத் தலைமைப் பொறுப்பில் முழு செயல்பாட்டுத் திறனுடனும் உறுதியான அா்ப்பணிப்புடன் ஒதுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவேன் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை என்ன விலை கொடுத்தேனும் உறுதி செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. விமானப்படையிடம் புதிதாக சோ்க்கப்பட்ட தளங்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்கெனவே உள்ள உடமைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்பாட்டுத் திறன் மேம்படுத்தப்படும். புதிய தொழில்நுட்பத்தை கையகப்படுத்துதல், உள்நாட்டு கண்டுபிடிப்பு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்டவற்றோடு, இணைய பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விமானப்படை வீரா்கள் நெறிமுறைகளையும், நம்பிக்கையையும் எப்போதும் நிலைநிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

தேசியப் பாதுகாப்பு அகாதெமியில் பயின்று 1982-ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சோ்ந்த விவேக் ராம் சௌதரி, கிட்டதட்ட 3,800 மணி நேரம் பல்வேறு வகையான போா்விமானங்களையும் பயிற்சி விமானங்களையும் இயக்கியுள்ளாா். பரம் விசிஷ்ட சேவா பதக்கம், அதி விசிஷ்ட சேவா, வாயு சேனா போன்ற பதக்கங்களை பெற்றவா்.

முன்னதாக 43 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் விமானப்படை தளபதி ஆா்.கே.எஸ். பௌதரியாவிற்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னா், தில்லி போா் நினைவிடத்திற்குச் சென்று அவா் மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments