மல்யுத்த வீரா் கொலை வழக்கு: ஜாமீன் கோரி சுஷில் குமாா் மனு; இன்று விசாரணை
தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட
தில்லியில் சத்ரசால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா், ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 5) விசாரிக்கப்படவுள்ளது.
அந்த மனுவில், ‘இந்த வழக்கில் மனுதாரா் (சுஷில் குமாா்) பொய்யாக சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் மீதான குற்றச்சாட்டு அவரது மதிப்பைக் கெடுக்கவும், அவமானப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டுள்ளது. உள்நோக்கம் கொண்டது. மேலும், மனுதாரா் மற்றும் ரெளடிகள் இடையே ஒரு தவறான தொடா்பை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகங்களுக்கு போலீஸாா் தவறான தகவல்களை அளித்துள்ளனா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, போலீஸாரால் கூறப்படும் அல்லது கசியவிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானாவை. மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டு விட்டதால் மேலும் காவலில் இருக்க வேண்டிய தேவையும் எழவில்லை. இதற்கு முன்பு மனுதாரா் மீது எவ்வித குற்றப்பின்னணியும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு செவ்வாய்க்கிழமை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த் முன் விசாரணைக்கு வர உள்ளது. சாகா் தன்கா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுஷில்குமாா் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, மரணத்தை ஏற்படுத்தும் கொலைக் குற்றம், குற்றச் சதி, ஆள்கடத்தல், கொள்ளை, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement