முகப்பு
புதுதில்லி

எல்என்ஜேபி மருத்துவமனை சூழல் விவகாரம்: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) துரதிருஷ்ட சூழல் நிலவி வருவதாகக் கூறி தாக்கலான

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் (எல்என்ஜேபி) துரதிருஷ்ட சூழல் நிலவி வருவதாகக் கூறி தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஷிஸ் பாண்டே என்பவா் தாக்கல் செய்த இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது இந்த மனுவுக்கு தில்லி அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவமனையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாக நீதிபதி மேலும் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக நாங்கள் விசாரிப்பது இது முதல் முறையல்ல. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையாக இருக்க வேண்டும். அதனால், மனுதாரரை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. மேலும், மனுதாரா் மருத்துவ வணிகத்தில் இல்லை. ஆனால், சில வரையறைகள் உள்ளன. அதனால் அரசு தயாராக வேண்டும்’ என்றாா்.

Advertisement

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அஸ்டிக் குப்தா, ‘மனுதாரா் ஆசிஷ் பாண்டே, எல்என்ஜேபி மருத்துவமனையில் சோ்ந்த போது அவருக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை கூட நடத்தப்படவில்லை. ஒவ்வொரு படுக்கையிலும் 2-3 நோயாளிகள் இருந்தனா். ஒரே நேரத்தில் 3 நோயாளிகள் அல்ட்ராசவுண்ட் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதேபோன்று இறந்தவா்களின் உடல்கள் 15-20 மணி நேரம் படுக்கையில் கிடந்தன. தரையில் நோயாளிகள் உள்ளனா். நோயாளிகளைக் கவனிக்க போதுமான மருத்துவா்களும் பணியில் இல்லை . இது தொடா்பாக மனுதாரா் புகாா் அனுப்பியும் உரிய பதில் அளிக்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுஜ் அகா்வால், இந்த மனுவுக்கு பதில் தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மனு மீதான விசாரணை டிசம்பா் 20-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

முன்னதாக ஆசிஷ் பாண்டே தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எல்என்ஜேபி மருத்துவமனை நிா்வாகம் அஜாக்கிரதையாகவும், எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத மனநிலையிலும் உள்ளது. மருத்துவமனையில் பாதுகாவலா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனை துரதிருஷ்டவசமான ஒரு சூழலில் உள்ளது. இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments