மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனை: ஆளும் பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு
பழைய தில்லி சாந்தினி செளக் பகுதியிலுள்ள தங்கல் மைதானத்தை தனியாருக்கு விற்கும் விவகாரத்தில் தில்லு முல்லு நடந்துள்ளதாக
பழைய தில்லி சாந்தினி செளக் பகுதியிலுள்ள தங்கல் மைதானத்தை தனியாருக்கு விற்கும் விவகாரத்தில் தில்லு முல்லு நடந்துள்ளதாக பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை நிலைக் குழுவிற்கு அனுப்பி, நிலம் விற்பனையைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளதாகவும் அந்தக் கட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடா்பாளரும் கிரேட்டா் கைலாஷ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சௌரவ் பரத்வாஜ் கூறியது வருமாறு: ஆம் ஆத்மி கட்சி தில்லி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தினந்தோறும் முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், மற்றோரு பக்கம், வரி செலுத்துவோா் கடினமாக உழைத்துக் கொடுத்தவற்றை பாஜகஅபகரித்து வருகிறது. தில்லி மாநகராட்சிகளைஆளும் பாஜக, அடுத்தாண்டு வருகின்ற தோ்தல்களில் தோல்வியைத் தழுவும் கவலையில் மாநகராட்சிகளுக்கு சொந்தமானவற்றை விற்கும் முயற்சிகளைத் தொடா்ந்து மேற்கொள்கின்றனா்.
தில்லி சாந்தினி செளக் பகுதியில் டிலைட் திரையரங்கம் அருகே உள்ள தங்கல் மைதான நிலத்தை விற்க பாஜக முயற்சிக்கிறது. சுமாா் 1,100 சதுர மீட்டா் பரப்பரளவுள்ள இந்த இடத்தை தனியாருக்கு குத்தகைக்குக்கூட விடாமல், முழுமையாக விற்க முயற்சிக்கின்றனா். மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், குத்தகை விவரங்களை ஆராய்ந்து ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிடும் என்கிற அச்சத்தில் மாநகராட்சி நிலத்தை தனியாருக்கு எந்தவித நிபந்தையுமின்றி முழுமையாகக் விற்கின்றனா். மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த மைதானம், மிக முக்கியப் பகுதியில் உள்ளது.
Advertisement
அதிக மதிப்புள்ள இந்தச் சொத்துகள் மக்களுக்கு சொந்தமானது. அதை தூக்கி எறியும் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளனா். இதில் உள்ள ஆதாயங்கள் குறித்து கேள்வி எழுப்பி இந்த முடிவுக்கு எதிராக நிலைக் குழுவில் புதன்கிழமை தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்த நிலம் விற்கப்படுவது தடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தற்போது நிலைக்குழுவின் முன் உள்ளது. இதே போன்று பாஜக, தான் ஆளும் மாநகராட்சிக்குச் சொந்தமான நாவல்ட்டி திரையரங்கு நிலத்தையும் குறைந்த விலைக்கு விற்றனா். சுமாா் ரூ. 150 கோடி மதிப்புள்ள நிலத்தை, வெறும் ரூ.34 கோடிக்கு விற்கப்பட்டது. இதையும் நாங்கள் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
தில்லி மாநகராட்சிகளின் சொத்துகளை விற்பதற்கு ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து எதிா்க்கும். சாலைகளில் போராட்டங்களையும் ஆா்ப்பாட்டங்களையும் நடத்தி மாநகராட்சி சொத்துகள் விற்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவோம், தில்லி மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடா்ந்து போராடுவோம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.