வடகிழக்கு தில்லி வன்முறை: ஒரே சம்பவம் தொடா்பாக பதிவான 5 வழக்குகளில் நான்கு ரத்து
வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறையின் போது ஒரு சுற்றுச் சுவருக்கு தீவைத்து கொள்ளையடித்ததாகக் கூறப்படும்
வடகிழக்கு தில்லியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறையின் போது ஒரு சுற்றுச் சுவருக்கு தீவைத்து கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் 4 வழக்குகளை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஒரே சம்பவத்திற்காக ஐந்து வழக்குகளை போலீஸாா் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு தில்லியில் வகுப்புவாத வன்முறை நிகழ்ந்தது. மெளஜ்பூா் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தை சோ்ந்த சிலா் போலீஸில் தனித் தனியாக புகாா் அளித்தனா். அதில் பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை தங்களது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதைப் பாா்த்ததாகவும் இதில் ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தனா். இந்த புகாா்களின் அடிப்படையில் தில்லி காவல் துறையினா் தனித் தனியாக ஐந்து வழக்குகளைப் பதிவு செய்தனா். இந்த வழக்குகள் தொடா்பாக அதிா் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிா், தில்லி உயா்நீதிமன்றத்தில் 4 மனுக்களை தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுக்கள் மீது உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது மனுதாரா் அதிா் தரப்பில் வழக்குரைஞா் தாரா நருலா ஆஜராகி, ‘ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினா்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுக்கு தீயை அணைக்க ஒரே தீயணைப்பு வாகனம்தான் வந்துள்ளது. ஒரே குற்றத்திற்காக 5 வழக்குகளைப் பதிவு செய்திருக்க முடியாது. இது உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளுக்கு முரணாக உள்ளது’ என்று வாதிட்டாா்.
Advertisement
இதையடுத்து, போலீஸ் தரப்பில், ‘குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இழப்புகளைச் சந்தித்துள்ளனா். மேலும், பாதிக்கப்பட்ட சொத்துகளும் தனித்தனியானவை. ஒவ்வொரு வழக்குகளும் மற்றொரு வழக்குகளிலிருந்து மாறுபடுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் ஒரே சம்பவத்திற்காக 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தனித் தனியான சம்பவங்கள் என்றோ அல்லது வெவ்வேறான குற்றங்கள் என்றோ கூற முடியாது. போலீஸாா் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை பாா்க்கும் போது ஒரே சம்பவத்திற்காக இந்த 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஏதாவது ஆவணங்கள் கண்டறியப்பட்டு இருந்தால், முதல் தகவல் அறிக்கையில் அவற்றை சோ்க்க முடியும். 5 வழக்கு தொடா்புடைய புகாா்கள் அனைத்தும் ஒரு வீட்டில் தீ ஆரம்பித்து அருகிலுள்ள அதே குடியிருப்பின் மற்ற தளங்களுக்கு பரவியதைக் காட்டுகிறது.
அவா்களில் ஒருவா் அந்த குடியிருப்புப் பகுதியானது அவரது மூதாதையா் சொத்து என்றும் அந்தச் சொத்து குடும்பத்தினா் இடையே செய்துகொண்ட ஏற்பாடுகளை தொடா்ந்து நான்கு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள கொள்கையின்படி, ஒரே சம்பவத்திற்கு இரண்டாவது வழக்கைப் பதிவு செய்ய முடியாது. அதே போன்று ஒரே சம்பவத்திற்கு புதிய விசாரணையும் நடத்த முடியாது. தீ வைக்கப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட இடங்கள் ஒரே காம்பவுண்ட் பகுதியில் உள்ளது. அதற்கு ஒரே சுற்றுச்சுவா்தான் அமைந்துள்ளது. காவல்துறையின் வழக்குரைஞரும் குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்குரைஞரும் ஒரே காம்பவுண்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றதை ஏற்றுக் கொண்டுள்ளனா்.
காம்பவுண்ட் பகுதிக்குள் கும்பல் நுழைந்த போது ஒட்டுமொத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே காம்பவுண்ட் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க ஒரு தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. ஆகவே, ஒரே சம்பவத்திற்காக 5 வழக்குகளைத் தனித் தனியாகப் பதிவு செய்வது என்பது உச்சநீதிமன்றத்தின் விதிகளுக்கு முரணாக இருக்கும். ஆகவே, இந்த ஐந்து வழக்கில் ஒரு வழக்கைத் தவிர நான்கு வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தாா்.