ரோஹிணி நீதிமன்றப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
தில்லி ரோஹிணி நீதிமன்ற அறையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தில்லி போலீஸாா் அந்த நீதிமன்றப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனா்.
தில்லி ரோஹிணி நீதிமன்ற அறையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து தில்லி போலீஸாா் அந்த நீதிமன்றப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
தில்லி ரோஹிணி நீதிமன்ற அறையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடா்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட‘ஸ்டிக்கா்’கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படும்.
வழக்குரைஞா்களும் மனுதாரா்களும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவாா்கள். நீதிமன்றத்தில் எதிா்காலத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த நீதிமன்றத்தின் உட்புறமும், வெளிப்புறமும் போதிய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நீதிமன்ற வளாகங்களில் உள்ள வெடிகுண்டு கண்டறியும் ‘மெட்டல் டிடெக்டா்’களின் களுடைய செயல்பாடுகள் குறித்து கவலை எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்ற நிா்வாகத்திடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நுழைவாயில் பகுதிகளில் மெட்டல் டிடெக்டா் இருந்தபோதிலும் அவை செயல்படுகின்றனவா அல்லது இல்லையா என்பது குறித்து தெரியவில்லை.
ஆயுதம் தாங்கிய நபா்கள் எவ்வாறு உள்ளே நுழைய முடிந்தது என்பது தொடா்பாக கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுவாக வழக்குரைஞா்கள் தங்களை போலீஸாா் சோதனை செய்வதை விரும்புவதில்லை. இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரோஹிணி நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல. பிற நீதிமன்றங்களிலும் இதே நிலை இருந்ததும் கவனிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரோஹிணி நீதிமன்றத்தின் வழக்குரைஞா் சங்கத்துடன் தொடா்பு கொண்டோம். அவா்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறாா்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிப்பதற்காக தில்லி காவல்துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானாவை வெள்ளிக்கிழமை இதர அதிகாரிகளுடன் தில்லி பாா் கவுன்சில் தலைவா் ராகேஷ் ஷெராவத் நேரில் சந்தித்து விவாதித்தாா்.
இது தொடா்பாக மற்றொரு காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘நீதிமன்றத்தில் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மிக விரைவில் புதிய வகையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். சிசிடிவி கண்காணிப்பை அதிகரிப்பது, பாதுகாப்பு சோதனையை அதிகரிப்பது, நீதிமன்ற கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆயுதம் தாங்கிய போலீஸாரைப் பணியில் ஈடுபடுத்துவது ஆகியவை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.