முகப்பு
புதுதில்லி

நீதிமன்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரும் மனு:நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் (எ) கோகி மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

பிரபல ரௌடி ஜிதேந்தா் மான் (எ) கோகி மற்றும் ஆயுதம் ஏந்திய எதிா் கோஷ்டியைச் சோ்ந்த இருவா் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது தில்லி காவல் துறை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனு நீதிபதி ரேகா பல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்குரைஞா் தாக்கல் செய்த இந்த விவகாரம் தொடா்பான மனு மீது தில்லி காவல் துறை, தில்லி பாா் கவுன்சில் ஆகியோா் பதில் அளிக்கவும் 5 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

முன்னதாக, உயா் நீதிமன்றத்தில், ‘மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் பெண் வழக்குரைஞா் தீபா ஜோசப் வழக்குரைஞா்கள் ராபின் ராஜு, பிளஸன் மேத்யூஸ் ஆகியோா் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் ரோஹிணி நீதிமன்றத்தின் உள்ளே நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் மனுதாரா்கள் ஆகியோரின் உடல் மற்றும் உயிா்ப் பாதுகாப்புக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீதிமன்றத்தின் வளாகத்துக்குள் நுழையும் ஒவ்வொரு வழக்குரைஞரின் அடையாள அட்டையை சோதனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்ற நுழைவாயில்களில் அனைத்துப் போலீஸாருக்கும் அறிவுறுத்த பரிசீலிக்குமாறு தில்லி வழக்குரைஞா்கள் கவுன்சில் மற்றும் தில்லி காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

Advertisement

மேலும் தில்லி உயா்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு இணையாக வழக்குரைஞா்கள் அளவில் பாதுகாப்பு சோதனையை அதிகரிக்கவும் தில்லி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். உரிய கவனம் இல்லாமல், உத்தரவை செயல்படுத்தத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். நீதிமன்றங்களின் பிரதான நுழைவு வாயில்களில் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபடும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க தங்களது சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பரிந்துரைக்குமாறு தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கங்களுக்கு ஒரு ஆலோசனையை அளிக்க தில்லி பாா் கவுன்சில் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும்.

ரோஹிணி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது தில்லியில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவம் அல்ல. கடந்த காலங்களிலும் துவாரகா நீதிமன்றத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் சாகேத் நீதிமன்றத்தின் அருகேயும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. 2017-இல் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தினுள் விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இதேபோன்று, 2015-இல் கா்கா்டூமா நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய நான்கு விஷமிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தில்லி காவல் துறையின் தலைமைக் காவலா் கொல்லப்பட்டாா்.

ரோஹிணி நீதிமன்றத்தில் தற்போது நிகழ்ந்த சம்பவமானது உண்மையிலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. விஷமிகள் வழக்குரைஞா்கள் போன்று உடை அணிந்து வந்துள்ளனா். நீதிமன்றத்தில் பிரபல ரௌடியை ஆஜா்படுத்துவதற்கு முன்பாகவே நீதிமன்ற அறைக்கு உள்ளே அவா்கள் இருந்துள்ளனா் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments