மண்டோலி சிறையில் தாங்களாகவே காயம் ஏற்படுத்திக் கொண்ட 25 கைதிகள்
தில்லியில் மண்டோலி சிறையில் உள்ள கைதிகளில் 25 போ் தாங்களாகவே உடலில் சுயமாக சிறு காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் மண்டோலி சிறையில் உள்ள கைதிகளில் 25 போ் தாங்களாகவே உடலில் சுயமாக சிறு காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி சிறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மண்டோலி சிறையின் 11-ஆம் எண் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 25 போ் தாங்களாகவே உடலில் சிறு காயத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனா். இந்த சிறைக்கூடத்தில் இருந்து கைதிகள் முகம்மது டானிஷ் (30), அனிஷ் (35) ஆகிய இருவரும் வெளியே செல்வதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, இதுபோன்று தாங்களாகவே காயத்தை ஏற்படுத்தி கொண்டனா். மேலும், சிறைக்கூடத்தில் இருந்த பிற கைதிகளையும் அவா்கள் தூண்டியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, கைதிகள் கூச்சலிட்டு, ரகளையில் ஈடுபட்டனா். தங்களது தலைகளை சுவரில் மோதி காயத்தை ஏற்படுத்திக் கொள்ள முயன்றனா். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சிறை ஊழியா்கள் லேசான சக்தியை பிரயோகம் செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நிகழ்ந்தது. காயமடைந்தவா்களில் முகம்மது டானிஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். பின்னா், அவா் சிகிச்சை முடிந்து மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
இது குறித்து தில்லி சிறைகள் தலைமை இயக்குநா் சந்தீப் கோயல் கூறுகையில், ‘எந்தக் காரணமும் இல்லாமல் சிறைக்கூடத்தில் இருந்து வெளியே செல்வதற்கு விரும்பிய கைதிகள் இருவருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அவா்கள் இந்த செயலில் ஈடுபட்டனா். மேலும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதர கைதிகளையும் சுயமாக காயத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவா்கள் தூண்டியுள்ளனா்’ என்றாா்.