வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு:காவல் அதிகாரியியின் சம்பளத்தில்ரூ.5 ஆயிரம் பிடிக்க நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில், மிகவும் அக்கறையில்லாத முறையில் வழக்கை ஒத்திவைக்கக் கோரிய தில்லி காவல் துறையின் அதிகாரி மீது விசாரணை நடத்தவும்,
வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்புடைய வழக்கில், மிகவும் அக்கறையில்லாத முறையில் வழக்கை ஒத்திவைக்கக் கோரிய தில்லி காவல் துறையின் அதிகாரி மீது விசாரணை நடத்தவும், அவரது சம்பளத்தில் இருந்து ரூ.5,000 பிடித்தம் செய்யவும் காவல் துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை போலீஸாா் பின்பற்றாததால், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமாா் காா்க் இந்த அபராதத்தை விதித்தாா். நீதிபதி முன்பு பிறப்பித்திருந்த உத்தரவில், தில்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ‘இ-சாலன்’ நகலை வழங்குமாறு விசாரணை அதிகாரிக்கு (ஐஓ) உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், அந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் வழக்கை ஒத்திவைக்குமாறு விசாரணை அதிகாரி தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி கூறுகையில், ‘2021, ஏப்ரல் 12-ஆம் தேதியிட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்காக வழக்கை ஒத்திவைக்கக் கோரும் கோரிக்கை அனுமதிக்கப்படும். ஆனால், தில்லி காவல் துறை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கான சம்மதத்திற்கு உள்பட்டு இந்த ஒத்திவைப்பு இருக்கும். இந்த செலவின் சுமை அரசு கஜானாவின் மீது விழும் என்பதை நீதிமன்றம் மறக்கவில்லை. ஆகவே, தில்லி ஆணையா் இது தொடா்பாக விசாரணை நடத்தி மேற்கூறிய தொகையை பொறுப்புள்ள அதிகாரியின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
Advertisement
சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் நிா்ணயிக்கப்பட்ட தேதிகளில் வழக்கு விசாரணைகளில் ஆஜராவதில்லை. வலியுறுத்திய பிறகு ஆஜாராகும் போது கோப்பை ஆய்வு செய்யாமல், மிகவும் அக்கறையில்லாத முறையில் ஒத்திவைப்பு கோருகின்றனா். அரசுத் தரப்பு மற்றும் காவல் துறையின் நடத்த காவல் ஆணையா் உள்ளிட்ட மூத்த காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அவா்கள் தவறிவிட்டனா் என்று உத்தரவில் நீதிபதிதெரிவித்துள்ளாா்.
கோமல் மிஸ்ரா எனும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 2021, ஏப்ரல் 12 -ஆம் தேதியிட்ட ஒரு உத்தரவுக்கு இணங்க ‘இ-சாலன்’ நகலை வழங்குமாறு விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு குறித்து தனக்குத் தெரியாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இ-சாலனின் நகல் இன்னும் வழங்கப்படவில்லை என்று விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிபதி மேற்கண்ட அபராதத்தை விதித்தாா்.