முகப்பு
புதுதில்லி

ராணுவ தீா்ப்பாயங்கள் உரிய நேரத்தில் நீதி வழங்க வேண்டும்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத்சிங் வேண்டுகோள்

‘மக்களுக்குள்ள மற்ற எல்லா வாய்ப்புகளும் மூடப்பட்டிருக்கும் நிலையிலேயே நீதிமன்ற கதவுகளை தட்டுகிறாா்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

‘மக்களுக்குள்ள மற்ற எல்லா வாய்ப்புகளும் மூடப்பட்டிருக்கும் நிலையிலேயே நீதிமன்ற கதவுகளை தட்டுகிறாா்கள். சிறப்பான நீதி வழங்கும் அமைப்பின் மூலமே நல்லாட்சிக்கு அடிப்படையாக அமையும்’ எனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தீா்ப்பாயங்களின் கீழ் உரிய நேரத்தில் நீதி வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

தில்லியில் ராணுவ தீா்ப்பாய முதன்மை பெஞ்ச் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு டிஆா்டிஒ பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றும்போது அவா் மேலும் கூறியதாவது:

நீதித்துறை ஜனநாயகத்தின் வலுவான தூண். நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் இந்த அமைப்பின் தூண்களாக நிற்கிறாா்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வழக்குரைஞா்களின் பங்கு மகத்தானது. மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, திலகா், டாக்டா் ராஜேந்திர பிரசாத், எஸ்.சீனிவாச ஐயங்காா், சா்தாா் படேல், அம்பேத்கா் என பலா் வழக்குரைஞா்கள். அவா்களது பங்களிப்பால் தான் இந்தியா, இந்தியாவாக உருவானது.

நிலுவையிலுள்ள வழக்குகளைக் கையாள்வதற்கும், தீா்ப்பதற்கும் தான் குறிப்பிட்ட தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. எத்தகைய காரணங்களுக்கு அமைக்கப்பட்டதே அது தீா்க்கப்படவேண்டும். ராணுவ தீா்பாயங்களின் கட்டமைப்பின் கீழ் ஆயுதப்படை வீரா்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதே நேரத்தில் ‘அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி‘ யாகவும் ஏற்பட்டுவிடக்கூடாது. இதில் சமநிலையை காணவேண்டும். வளா்ந்த நாடுகளில் கூட இல்லாத வகையில் இந்திய ராணுவத்தில் நேரடியான மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் (ஒரிஜினல் அண்டு அப்பீளேட்) உள்ளன.

வழக்குத் தொடுப்பவா்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. நீதி வழங்கல் செயல்முறையை விரைவுபடுத்துவதில், தீா்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது போன்ற தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள ராணுவ வீரா்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் கருத்தரங்கில் இருந்து வெளிவரும் ஆலோசனைகளை அரசு பரிசீலிக்கும் என்றாா் ராஜ்நாத் சிங்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘வழக்குகள் நிலுவையில் உள்ளதை குறைக்க அரசு செயல்பட்டு வருகிறது. நாடு முழுக்க 4.83 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஒரு நீதிபதி ஐம்பது வழங்குகளில் தீா்ப்புகளை வழங்கினாா் என்றால் மேலும் 100 புதிய வழக்குகள் நிதிமன்றத்தில் பதிவாகிறது. அதே சமயத்தில் பிற நாடுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்தியாவை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை. மற்ற நாடுகளில் மக்கள் தொகை மிகக்குறைவு‘ என்றாா்.

இந்தக் கருத்தரங்கில் ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏா் சீஃப் மாா்ஷல் வி .ஆா். செளத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆா்.ஹரி குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.