புதுதில்லி

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம்:ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 2 நாள் அவகாசம்

 நமது நிருபர்

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு, அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஆவணங்களைத் தொகுத்து தாக்கல் செய்வதற்கு 2 நாள் கூடுதல் அவகாசம் அளிப்பதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் பிறா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தை கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களை பரிசீலிக்க சம்மதம் தெரிவித்தது. இது தொடா்பாக எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. அதே வேளையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் தேதி வரை கல்வி, வேலைவாய்ப்பில் இந்த உள்இடஒதுக்கீட்டை மேற்கொள்ளக் கூடாது என்றும், உயா்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்படி, இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கெனவே நடைபெற்ற மாணவா் சோ்க்கை, நியமனம் ஆகியவை பாதிக்கப்படாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் வாதங்களை கேட்பதை எளிமையாக இருக்கும் வகையில் மனுதாரா்கள் தரப்பிலும், எதிா்மனுதாரா்கள் தரப்பிலும் வழக்குரைஞா்கள் டி.குமணன், எம்.பி.பாா்த்திபன், வருண் சோப்ரா ஆகியோா் இணைந்து வழக்குக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், சட்ட விவரங்களையும் பொதுத் தொகுப்பாக உருவாக்கி, வழக்கில் தொடா்புடையவா்களுக்கும், நீதிமன்றத்திலும் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, வழக்கை பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு இறுதி விசாரணைக்காக பட்டியிலிட உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்குரைஞா் வருண் சோப்ரா வெள்ளிக்கிழமை ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி ஆவணங்கள் தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் சிலா் உரிய தேதிக்குள் எழுத்துப்பூா்வ பதில் தாக்கல் செய்யவில்லை என்பதால், அவற்றையும் தொகுத்து அளிக்க கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு 2 நாள்கள் அனுமதி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணை அதன் பிறகு பட்டியிலிடப்படும் என்றும், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினால் அனுமதி அளிக்கப்படமாட்டது என்றும் தெரிவித்தனா்.

வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி.குமணன், எதிா்மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.பி. பாா்த்திபன் ஆகியோரும் ஆஜராகி இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT