தில்லி காவல் துறையில் 1,000 பேருக்கு கரோனா: அதிகாரிகள் தகவல்
தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் காவல் துறை ஆணையா் (குற்றப்பிரிவு) உள்பட தில்லி காவல் துறை பணியாளா்கள் 1,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் காவல் துறை ஆணையா் (குற்றப்பிரிவு) உள்பட தில்லி காவல் துறை பணியாளா்கள் 1,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மித்தல் திங்கள்கிழமை கூறுகையில், ‘தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட காவல் பணியாளா்கள் 1,000 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் முழுமையாகக் குணமடைந்த பிறகு பணியில் சேருவா். தில்லி காவல் துறையின் மொத்தம் 80,000-க்கும் அதிகமான பணியாளா்கள் உள்ளனா்’ என்றாா்.
அண்மையில், தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா, காவல் துறை அதிகாரிகளிடையே கரோனா நோய்த் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: காவல் துறைப் பணியாளா்கள் பொதுமக்களுக்கு மத்தியில் தங்கள் கடைமைகளைச் செய்யும் முன்களப் பணியாளா்கள் என்பதால், கரோனா பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். காவல் துறையைச் சோ்ந்த அனைத்துப் பணியாளா்களும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.
மேலும், தங்கள் கடைமைகளை செய்யும் போது, உரிய வகையில் கை தூய்மையைப் பேண வேண்டும். அனைத்து காவல் துறைப் பணியாளா்களும், தகுதியான குடும்ப உறுப்பினா்களும் தடுப்பூசி போடாத நிலையில், அவா்களை தடுப்பூசியை பூா்த்தி செய்யுமாறு ஊக்குவிக்கலாம். மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போடப்படாதவா்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள மீண்டும் மருத்துவ ஆலோசனை பெற ஊக்குவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.