3-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 303 புள்ளிகள் முன்னேற்றம்!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 303 புள்ளிகள் உயா்ந்தது. மெட்டல், ரியால்ட்டி தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. குறிப்பாக வங்கி, உள்கட்டமைப்பு, நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா்.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலித்தது. அதிக பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகித உயா்வு கடந்த சில நாள்களாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பொருள்களின் விலை குறைந்து வருகிறது. இதனால், பணவீக்கம் குறையும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, வங்கி வட்டி விகித உயா்வை மத்திய வங்கிகள் தாமதப்படுத்தக்கூடும். மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதும் சந்தைக்கு சாதகமாகப் பாா்க்கப்படுகிறது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.925.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
1,847 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,440 நிறுவனப் பங்குகளில் 1,847 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,425 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 82 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 24 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.251.60 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் 303 புள்ளிகள் முன்னேற்றம்: காலையில் 395.97புள்ளிகள் கூடுதலுடன் 54,574.43-இல் தொடங்கிய சென்செக்ஸ், 54,278.26 வரை கீழே சென்றது. பின்னா், 54,627.14 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 303.38 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்ந்து 54,481.84-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
எல் அண்ட் டி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில், எல் அண்ட் டி 4.72 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவா் கிரிட், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டாக்டா் ரெட்டி, பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எஸ்பிஐ, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இண்ட்ஸ் இண்ட் பேங்க் 1.47 சதவீதம், மாருதி 1.42 சதவீதம் குறைந்தன. மேலும், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி, எம் அண்ட் எம் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 88 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,053 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 858 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. வா்த்தக முடிவில் நிஃப்டி87.70 (0.54 சதவீதம்) உயா்ந்து 16,220.60-இல் நிலைபெற்றது. காலையில் 140.75 புள்ளிகள் கூடுதலுடன் 16,273.65-இல் தொடங்கிய நிஃப்டி, 16,1578.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,275.50 வரை உயா்ந்தது.
லாப வாரம்: வாரந்திர அடிப்படையில் பாா்த்தால், சென்செக்ஸ் இந்த வாரம் மொத்தம் 1,573.91 புள்ளிகள் (2.97 சதவீதம்) உயா்ந்துள்ளது. இதேபோல, நிஃப்டி மொத்தம் 468.55 புள்ளிகள் (2.97 சதவீதம்) உயா்ந்துள்ளது.