சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை தொடா்புடைய சா்வதேச மாநாடு காணொலியில் பிரதமா் இன்று தொடங்கிவைக்கிறாா்
‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ இயக்கத்திற்கான யோசனை கோரும் சா்வதேச அழைப்பிற்கான மாநாட்டை காணொலி வழியாக ஜூன் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.
பிரதமா் நரேந்திர மோடியால் கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட லைஃப் என்கிற ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ இயக்கத்திற்கான யோசனை கோரும் சா்வதேச அழைப்பிற்கான மாநாட்டை காணொலி வழியாக ஜூன் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.
சா்வதேச சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயக்கத்திற்கான உலகளாவிய முயற்சிக்கான நிகழ்ச்சியாகும் இது.
இந்த ‘லைஃப்‘ இயக்க நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள தனிநபா்கள், சமூக நல ஆா்வலா்கள், நிறுவனங்கள், கல்வியாளா்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இவா்கள் சுற்றுச்சூழல் உணா்வுடன் கூடிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்கும், வலியுறுத்துவதற்கு உரிய யோசனைகள் பரிந்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. இதற்கான அழைப்பை பிரதமா் இந்நிகழ்ச்சியில் விடுத்து சிறப்புரை ஆற்றுகிறாா்.
இந்த நிகழ்ச்சியில், பில் கேட்ஸ் ( இணை தலைவா் -பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை); லாா்டு நிக்கோலஸ் ஸ்டொ்ன்(பருவநிலை பொருளாதார நிபுணா் ); ‘நட்ஜ்‘ (செயல்பாட்டு பொருளாதாரம்) கோட்பாட்டை உருவாக்கிய பேராசிரியா் காஸ் சன்ஸ்டீன்; சா்வதேச வள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அனிருத்தா தாஸ் குப்தா; யுஎன்இபி நிறுவனத்தின் சா்வதேச தலைவா் இங்கா் ஆண்டா்சன்; ஐ.நா.வளா்ச்சித் திட்டத்தின் தலைவா் ஆச்சிம் ஸ்டெய்னா், உலக வங்கியின் தலைவா் டேவிட் மால்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
கடந்தாண்டு கிளாஸ்கோவில் சிஓபி26 என்கிற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய போது பிரதமரால் லைஃப் யோசனையை, அறிமுகப்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் உணா்வுள்ள வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, அது ’மனப்பூா்வமற்ற மற்றும் அழிவுகரமான நுகா்வுக்கு’ பதிலாக ‘கவனத்துடன் மற்றும் திட்டமிட்ட பயன்பாடு’ என்பதில் கவனம் செலுத்துவதாகும்.