முகப்பு
புதுதில்லி

தலைநகரில் 10,000 மரக்கன்றுகள் நட்டுள்ள தில்லி காவல் துறை!

தில்லி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகா் முழுவதும் 10,000 மரக்கன்றுகளை நட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

நிலையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தில்லி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகா் முழுவதும் 10,000 மரக்கன்றுகளை நட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் குடும்ப நலச் சங்கம், சாஹ்யோக் கோ் என்ற தன்னாா்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது. தெற்கு தில்லி, தென்மேற்கு தில்லி மற்றும் மேற்கு தில்லி மாவட்டங்களில் உள்ள பல்வேறு போலீஸ் காலனிகள், காவல் நிலையங்கள் மற்றும் போலீஸ் குடும்ப நல மையங்கள் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

‘இயற்கையின் மீதான அன்பை வளா்ப்பதன் மூலம் விழிப்புணா்வை உருவாக்குவதும் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை மேம்படுத்துவதுமே முதன்மை நோக்கமாகும்‘ என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா். போலீஸ் குடும்ப நலச் சங்கத்தின் தலைவரான அனு அஸ்தானா மற்றும் பிற மூத்த நிா்வாகிகள் புது தில்லியில் உள்ள 17, அன்னை தெரசா கிரசன்ட் பகுதியில் இருந்து மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தனா். மரக்கன்றுகளை நடுவது மட்டுமின்றி அவற்றைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவா் எடுத்துரைத்தாா். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு வருடத்தில் குறைந்தது ஐந்து மரங்களையாவது நடுமாறு அனைவரையும் அஸ்தானா கேட்டுக் கொண்டாா்.

புறநகா் காவல் சரக துணை ஆணையா் சமீா் சா்மா கூறுகையில், ‘வெளி மாவட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 1,101 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நடப்பட்ட அனைத்து மரக்கன்றுகளையும் பராமரிப்பதாக எங்கள் ஊழியா்கள் உறுதியளித்துள்ளனா்’ என்றாா். மேலும், ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், எனது அலுவலக வளாகம் மற்றும் பீதம்புரா காவல் கோட்டத்தில் ஒரு தூய்மை இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.