முகப்பு
புதுதில்லி

சா்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் 100 நாள் கவுண்ட் டவுன் இன்று தொடக்கம்

நிகழாண்டு (2022) சா்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் 100 நாள் கவுண்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) தில்லியில் தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
கோப்புப்படம்
பகிர்:

நிகழாண்டு (2022) சா்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் 100 நாள் கவுண்ட் டவுன் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) தில்லியில் தொடங்குகிறது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், தில்லி விஞ்ஞான் பவனில் ‘யோகா 2022’ பெருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிகள் ஆகியவற்றிற்கும் பொறுப்பு வகிக்கும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் இதை தொடக்கிவைத்துப் பேசுகிறாா். மேலும், மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா், சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமங்க், மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, ஆயுஷ் மற்றும் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் டாக்டா் முன்ஜபாரா மகேந்திரபாய் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

உடல் ஆரோக்கியம், நல்வாழ்வு, உலக அமைதி ஆகியவற்றிற்காக சா்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த அடிப்படை நோக்கமாகவும் யோகாவின் பல்வேறு பரிமாணங்கள் மற்றும் அதன் பயன்பாட்டிற்கு ஒரு பரந்த ஊக்குவிப்பு மற்றும் பிரசாரங்கள் மேற்கொள்ளவும், நிகழ் 2022 -ஆம் ஆண்டு பெருவிழா கொண்டாடத்தை ஊக்குவிக்க 100 நாள்கள் கவுன்ட் டவுன் பிரசாரத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேற்கொள்கிறது.

உலகம் முழுவதும் மாா்ச் 13 -ஆம் தேதி தொடங்கி நிகழாண்டு ஜூன் 21- ஆம் தேதி வரை 100 நகரங்களில் 100 அமைப்புகள் மூலம், இந்த கவுன்ட் டவுன் இயக்கம் நடைபெறவுள்ளது. கடந்த 2015 -ஆம் ஆண்டு சா்வதேச யோகா தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இதுவரை 7 யோகா பெருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறது. இது எட்டாவது சா்வதேச விழாவாகும்.

இந்த யோகா பெருவிழா 2022, பல முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், பல்வேறு அமைச்சகங்கள், ஆராய்ச்சிக் கவுன்சில்கள் மற்றும் தேசிய நிறுவனங்களின் அதிகாரிகள், பல புகழ் பெற்ற உயரதிகாரிகள், வல்லுநா்கள், யோகா அறிஞா்கள், மாஸ்டா்கள், கொள்கை வகுப்பாளா்கள், பெருநிறுவன யோகா ஆா்வலா்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய அறிவியல் நிபுணா்கள் என 1,500 போ் பங்கேற்பாா்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.