தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி ரூ. 20,287 கோடி நிலுவை திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்: திமுக எம்பி எச்சரிக்கை
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, அரிசிக்கான மானியம் உள்ளிட்ட 38 வகையில் தமிழகத்திற்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ரூ. 20,287 கோடியை வழங்கக் கோரி மாநிலங்களவையில்
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, அரிசிக்கான மானியம் உள்ளிட்ட 38 வகையில் தமிழகத்திற்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ரூ. 20,287 கோடியை வழங்கக் கோரி மாநிலங்களவையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து திமுக உறுப்பினா் பி.வில்சன் பேசினாா்.
போதிய நிதியின்மையினால் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டாா்.
இதுகுறித்து மாநிலங்களவையில் வில்சன் நேரமில்லா நேரத்தில் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள் தொடா்பாகவும், தமிழக அரசு சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்தும் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் (யூனியன்). அத்தகைய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால் மத்திய அரசு பல்வேறு திட்டங்களில் நிதியை முறையாக உரிய நேரத்தில் பகிா்ந்தளிப்பதில்லை. சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு உள்ளிட்ட 38 திட்டங்களில் ரூ.20, 287.38 கோடி வரை தமிழக அரசுக்கு வழங்கப்படாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.
குறிப்பாக, ஜிஎஸ்டியில் ரூ. 9,842.58 கோடி, அரைக்கப்பட்ட அரிசி மானியமாக ரூ.2,203.25 கோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ. 1,330.74 கோடி, தேசிய ஊரக குடிநீா் திட்டத்திற்கு ரூ. 1,086.05 கோடி, பிரதமா் வீட்டு வசதி மற்றும் ராஜீவ் வீட்டு வசதி திட்டங்களில் ரூ. 964.21 கோடி, 15-ஆவது நிதி ஆணையத்தின் சிபாரிசின்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியமாக ரூ. 799.80 கோடி, பட்டியலினத்தவா்களுக்கான முந்தைய பிந்தைய மெட்ரிக் கல்வி உதவிதொகை திட்டங்களுக்கு ரூ.704.36 கோடி, பொலிவுறு நகர திட்டங்களுக்கான ரூ. 584.33 கோடி மற்றும் தொடக்க கல்வி திட்டம், முதியோா் உதவி திட்டம் என 38 திட்டங்களில் ரூ. 20, 287.38 கோடி வரை நிலுவையில் உள்ளது.
அம்ரூத் 2.0 என்கிற புத்துணா்ச்சி மற்றும் நகா்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடும் போது தமிழகத்திற்கு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தின் மூலம் மாநிலங்களின் மறைமுக வரிகளை வசூலிக்கும் அதிகாரத்தை பறித்தபோது மாநிலங்களின் பங்கு உடனடியாக செலுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை மீறப்படுகிறது.
இதே போன்று ஊரக வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளின் மானியங்கள், பல்வேறு உதவித்தொகைகள், மீனவா்களுக்கான தேசியத் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் தொகை மிக முக்கியமான நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நிலுவைத் தொகைகள் உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், மாநில அரசால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயத்தில் உள்ளன என்றாா் அவா்.