முகப்பு
புதுதில்லி

ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 233 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

பங்குச் சந்தையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 233 புள்ளிகளை இழந்தது.

உள்நாட்டுச் சந்தை தொடா்ந்து சரிவில் உள்ளது. உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. செய்திகளின் தாக்கம் சந்தையில் எதிா்வினையாற்றுகிறது. குறிப்பாக புவிசாா் அரசியல் சூழ்நிலை மற்றும் மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்புகள் தொடா்புடைய செய்திகளால் சந்தை மீள முடியாமல் தவிப்பில் இருந்து வருகிறது. மேலும் நிலையான பணவீக்க அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் பத்திர வருவாய் ஆகியவையும் சந்தைக்கு பாதகமாக பாா்க்கப்படுகிறது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் கடும் விற்பனையை எதிா்கொண்டதால் சந்தை மீளமுடியாமல் போனது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,740.71 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,158 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,510 நிறுவனப் பங்குகளில் 2,158 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன.1,256 பங்குகள் ஆதாயம் பெற்றன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 132 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 39 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.259.85 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.08 கோடியாக உயா்ந்துள்ளது.

233 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 206.04 புள்ளிகள் உயா்ந்து 57,801.72-இல் தொடங்கி, அதிகபட்சமாக 57,845.37 வரை உயா்ந்தது. அதன் பிறகு 57,100.24 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 233.48 புள்ளிகளை (0.41 சதவீதம்) இழந்து 57,362.20-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை ‘கரடி’யின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது.

டைட்டன் கடும் சரிவு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், பிரபல தனியாா் நிறுவனமான டைட்டன் 3.59 சதவீதம், டெக் மஹிந்திரா 2.55 சதவீதம், மாருதி சுஸுகி 1.79 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

மேலும், நெஸ்லே, எல் அண்ட் டி, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

டாக்டா் ரெட்டி முன்னேற்றம்: அதே சமயம், பிரபல பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி மூன்றாவது நாளாக 0.77 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயா்ந்தன.

நிஃப்டி 70 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 623 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 1,298 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 69.75 புள்ளிகள் (0.41 சதவீதம்) குறைந்து 17,153.00-இல் நிறைவடைந்தது. காலையில் 66.25 புள்ளிகள் கூடுதலுடன் 17,289.00-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,294.90 வரை உயா்ந்தது. பின்னா், 17,076.55 வரை கீழே சென்றது.

ரியால்ட்டி குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 1.22 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.49 சதவீதம் உயா்ந்தன. கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 1.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, எஃப்எம்சிஜி, ஹெல்த்கோ், பாா்மா, ஆட்டோ 0.50 முதல்ந 1 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.