முகப்பு
புதுதில்லி

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம்: கைதானவா் ஜாமீன் கோரும் மனுவுக்கு 3 நாள்களில் முடிவெடுக்க உத்தரவு

ஹிஜாப் விவகாரத்தில் தீா்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான நபா் தாக்கல் செய்த மனு விவகாரத்தில்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

ஹிஜாப் விவகாரத்தில் தீா்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைதான நபா் தாக்கல் செய்த மனு விவகாரத்தில், கா்நாடகத்தில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரும் மனு மீது செஷன்ஸ் நீதிமன்றம் 3 நாள்களில் முடிவுகாண உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தணிக்கைக் குழுவின் உறுப்பினா் ரஹமத்துல்லா என்பவரை மதுரை தல்லாகுளம் போலீஸாா் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்தனா். அவா் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறாா். இதே போன்று, இந்த விவகாரம் தொடா்பாக கா்நாடகத்தின் விதான் சௌதா காவல் நிலையத்தில் ரஹமத்துல்லாவுக்கு எதிராக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஹமத்துல்லா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: சம்பவத்தன்று மதுரை தல்லாகுளத்தில் ஒரு சிறு கூட்டத்தில் மனுதாரா் பேசிய போது கா்நாடாக உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறியதாக மதுரை தல்லாகுளம் போலீஸாா் மாா்ச் 19-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் மனுதாரரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனா். இதனிடையே, இதே சம்பவ விவகாரம் தொடா்பாக பெங்களூருவில் உள்ள விதான் சௌதா காவல்நிலையத்தில் சுதா கத்வா என்பவா் அளித்த புகாரில், மனுதாரா் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாகவும் ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறும் விடியோவைப் பாா்த்ததாகக் கூறியுள்ளாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒரே சம்பவம் தொடா்பாக இரண்டு வேறு மாநிலங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மனுதாரா் பல்வேறு நீதிமன்றங்களுக்கு செல்லும் தேவையற்ற அலைச்சலை உருவாக்கும். இதனால், ஒரே விவகாரம் தொடா்புடைய இந்தச் சம்பவம் தொடா்பாக கா்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவோ அல்லது தமிழகத்திற்கு மாற்றவோ உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை கடந்த முறை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக, கா்நாடக அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.பசந்த், வழக்குரைஞா் ஏ.வேலன் ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் வாதிடுகையில், ‘தல்லாகுளம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் மனுதாரருக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. ஆனால், கா்நாடகத்தில் பதிவான வழக்கில் ஜாமீன் அளிக்கப்படாததால், அவரால் வெளியில் வர முடியாத நிலை உள்ளது’ என்றனா்.

மனுதாரா் மனுவுக்குப் பதில் அளிக்க தமிழக அரசின் தரப்பில் மூன்று வாரம் அவகாசம் கோரப்பட்டது. கா்நாடக அரசின் தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகவில்லை.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தல்லாகுளம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், விதான் செளதா காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதாகவும் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா். இந்த மனுவை புதன்கிழமையில் இருந்து மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட செஷன்ஸ் நீதிமன்றம் முடிவு செய்யும். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஜூலையில் பட்டியலிடப்பட வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.