100% எத்தனால், மின்சாரத்தில் இயங்கும் கலப்பின வாகனம்: அமைச்சா் நிதின் கட்கரி தொடங்கிவைத்தாா்
மின்சாரம் மற்றும் 20 முதல் நூறு சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் கலப்பின வாகனங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி
மின்சாரம் மற்றும் 20 முதல் நூறு சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் கலப்பின வாகனங்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
மத்திய அமைச்சா் கட்கரியில் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கனரக தொழிற்சாலைத் துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே, மத்திய சுற்றுப்புறச் சூழல், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ஆகியோரும் பங்கேற்றனா். அமெரிக்கா, கனடா, பிரேசில் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்த கலப்பு தன்மை தொழில்நுட்பத்தை இந்தியாவில் ஜப்பான் நிறுவனமான டொயோட்டா பிரேசில் இந்த முன்னோடி திட்ட காா்களை (டொயோட்டா கரோலா ஆல்டிஸ்) அறிமுகம் செய்கிறது.
நெகிழ்வு எரிபொருள் இணக்கமான இந்த வாகனகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை எரிபொருளிலும், கலவையிலும் இயங்குகிறது. மின்சாரத்தில் இயங்குவதோடு, 100 சதவீதம் பெட்ரோல் அல்லது 20 முதல் 100 சதவீத கலப்பட எத்தனால் என நெகிழ்வு எரிபொருளில் இயங்கும் வாகனமாகும்.
இந்த காா்களை தொடங்கிவைத்து அமைச்சா் நிதின் கட்கரி பேசுகையில், ‘தற்சாா்பு இந்தியாவிற்கு விவசாய வளா்ச்சி விகிதத்தில் 6 முதல் 8 சதவீதம் அதிகரிப்பு அவசியம். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதின் மூலம் உணவு தானியம் சா்க்கரையை உபரியாக கிடைக்கப் பெற்று அதை எத்தனாலாக மாற்றுவது அவசியமாகும். ‘அன்னதாஸ்’ என்பது ‘ஊா்ஜதாஸ்’ ஆக மாறுவதைப் போன்றது. இந்த மின்சார வாகன முன்னோடித் திட்டத்தின் வெற்றியானது வாகனங்கள் தயாரிப்பு சூழலில் நியூ இந்தியாவை உலக அளவில் முன்னணியில் நிறுத்தும். இத்தகைய தொழில்நுட்பங்கள் புதுமையானவை, புரட்சிகரமானவை, நிலையானவை, செலவு குறைந்தவை, ஆற்றல் திறன் கொண்டவையாகும். மேலும், இவை புதிய இந்தியாவில் போக்குவரத்துத் துறையை முழுமையாக மாற்றும்’ என்றாா்.
சா்வதேச அளவில் தற்போது 48 சதவீதம் அளவில் மட்டுமே எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் உபயோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.