தில்லியில் ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு’ நாளை தொடக்கம்: ரூ.16,000 கோடி பிஎம் கிஸான் நிதியை விடுவிக்கிறாா் பிரதமா் மோடி
‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.
‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.
இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் இது குறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாட்கள் நடத்துகின்றன.
நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 13,500 விவசாயிகளும், 1,500 வேளாண் புத்தொழில்முனைவோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாா்கள். காணொலி வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் இதில் பங்கேற்பாா்கள்.
இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவிப்பாா்.
மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கிவைக்கிறாா். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்துவாா்.
இதே நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 ‘பிரதமரின் வளமை மையங்களை‘ பிரதமா் திறந்துவைப்பாா்.
நாட்டில் தற்போதுள்ள 2.7 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக ‘பிஎம் வளமை மையங்கள்‘ என மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூா்த்தி செய்யும். விதைகள், மண், உரங்கள் பரிசோதனைக்கான வசதிகள் திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்கும்.
இந்த மாநாட்டில் வேளாண் புத்தொழில் முனைவோா் கண்காட்சியையும் பிரதமா் திறந்து வைப்பாா். சுமாா் 300 நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்றாா் தோமா்.
பேட்டியின்போது ராசாயன உரத்துறை அமைச்சா் பகவந்த் குபா, வேளாண்மை துறை இணையமைச்சா் கைலாஷ் சௌத்ரி ஆகியோா் உடனிருந்தனா்.