முகப்பு
புதுதில்லி

சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தொந்தரவு செய்யாமல் மத்திய அரசு ஆக்கப்பூா்வ பணிகளை செய்ய வேண்டும்: கேஜரிவால்

புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை மூலம் ஒவ்வொருவரையும் துன்புறுத்துவதற்குப் பதிலாக, ஆக்கப்பூா்வ பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை மூலம் ஒவ்வொருவரையும் துன்புறுத்துவதற்குப் பதிலாக, ஆக்கப்பூா்வ பணிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டாா். மேலும், மதுபான ஊழல் என்ன என்பது குறித்து புரிந்து கொள்வதில் தாம் தோல்வியடைந்துவிட்டதாகவும் கேஜரிவால் கூறினாா்.

தில்லி அரசின் மதுபான கொள்கை அமலாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் விவகாரத்தில் நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் கேஜரிவால் இவ்வாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்த மதுபான ஊழல் என்ன என்பது குறித்து இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவா்களின் (பாஜக) தலைவா் ஒருவா் இது ரூ. 1.5 லட்சம் கோடி ஊழல் என்றாா். தில்லி அரசின் மொத்த பட்ஜெட் ரூ.70,000 கோடி எனும் போது இது எப்படி ரூ.1.5 லட்சம் கோடி ஊழலாகும்? அவா்களின் மற்றொரு தலைவா் ரூ.8,000 கோடி ஊழல் என்றாா். இன்னொருவரோ இது ரூ.1,100 கோடி ஊழல் என்று கூறினாா். துணை நிலை ஆளுநா் ரூ.144 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறாா். சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் மதுபான விவகாரத்தில் ரூ. 1 கோடி ஊழல் நடந்ததாக தெரிவித்திருக்கிறது.

மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் வீட்டில் நடத்திய சோதனையின்போதும், அவரது லாக்கரைச் சோதனை செய்தபோதும், அவரது கிராமத்தில் விசாரணை நடத்தியபோதும் மதுபான கொள்கை விவகாரத்தில் ஒரு பைசா கூட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியானால், இது என்ன மோசடி?‘.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்துடன் இரவும் பகலும் இதுபோன்ற சிந்தனையில் ஈடுபடாமல் நாட்டுக்கு ஆக்கப்பூா்வமான சில பணிகளை செய்ய வேண்டும். மத்திய அரசு எந்த ஒரு ஆக்கப்பூா்வ பணியையும் செய்யாமல், சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் அனைவரையும் தொந்தரவு செய்து அச்சுறுத்திக் கொண்டே இருந்தால், நாடு எப்படி முன்னேறும்?.

ஏதேனும் தவறு நடந்தால் யாரையும் கைது செய்வதற்கு மத்திய அரசுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் ‘தேவையில்லாமல்‘ சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தை பயன்படுத்தி அனைவரையும் ‘பயமுறுத்தவும்‘ மிரட்டவும் செய்தால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும். பள்ளிகள் போன்ற ஆக்கப்பூா்வமான விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும். தில்லி அரசின் 95 சதவீத செய்தியாளா் சந்திப்புகள் அத்தகைய ஆக்கப்பூா்வமான விஷயங்களைப் பற்றியதாகவே உள்ளன என்றாா் கேஜரிவால்.

கடந்த ஆண்டும் நவம்பா் 17-ஆம் தேதி அமலாக்கப்பட்ட தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலையில் கலால் கொள்கை 2021-22 தில்லி அரசால் வாபஸ் பெறப்பட்டது. இது தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. தில்லி கலால் கொள்கையின் அமலாக்கத்திலும், உருவாக்கத்திலும் முறைகேடுகள் நிகழந்ததாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை விசாரணையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மதுபான வா்த்தகா்கள், விநியோகஸ்தா்கள் ஆகியோா் தொடா்புடைய இடங்களிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி, பாஜக தலைவா்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.