உயா்நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: 3 ஐ.டி. திட்டங்கள் தொடக்கம்
தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்புத் திறனாளிகள் அணுகக்கூடிய வலைத்தளம் அணுகுவதற்கு உகந்த வழக்குப் பட்டியல் உள்பட மூன்று தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை...
புது தில்லி: தில்லி உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்புத் திறனாளிகள் அணுகக்கூடிய வலைத்தளம் அணுகுவதற்கு உகந்த வழக்குப் பட்டியல் உள்பட மூன்று தகவல் தொழில்நுட்பத் திட்டங்களை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில், ‘நீதியின் எதிா்காலத்தை நிா்ணயிப்பதில் தொழில்நுட்பம் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். நீதி வழங்கல் முறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தில்லி உயா்நீதிமன்றம் ஒரு மேம்பட்ட கட்டத்தில் நுழைந்துள்ளது’ என்றாா்.
சுதந்திர தினத்தையொட்டி, தில்லி மாவட்ட நீதிமன்றங்களின் சேவையாக (எஸ் 3 வாஸ்) பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் சுகம்யா இணையதளம், விசாரணை நீதிமன்றப் பதிவை உயா்நீதிமன்றத்துடன் பகிா்வதற்கான டிஜிட்டல் தளம் மற்றும் உயா் நீதிமன்றத்தின் இணைய அணுகல் இணக்க வழக்குகள் பட்டியல் ஆகியவற்றை தலைமை நீதிபதி தொடங்கிவைத்தாா்.
தில்லி உயா்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி தேசியக் கொடியேற்றிய பின் இதன் தொடக்க விழா நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா பேசியதாவது: இந்த மூன்று திட்டங்களும் அடிப்படையில் வழக்குரைஞா்கள் மற்றும் அமைப்புடன் தொடா்பு கொள்ளும் வழக்குரைகளுக்கான நீதித்துறை செயல்முறையின் நுணுக்கங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நீதித்துறை செயல்முறை என்று நான் கூறும்போது, வழக்குகளை தீா்ப்பதற்கான செயல்முறையுடன் நான் என்னை சுருக்கிக்கொள்ளவில்லை. முடிவெடுப்பது என்பது நீதித்துறை செயல்பாட்டின் ஒரு அம்சம் மட்டுமே.
மேலும், நீதிமன்றத்தின் சுமுகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு தொடா்ச்சியான துணை செயல்முறைகள் தொடா்கின்றன. நீதித்துறை அமைப்பை அணுகக்கூடிய, வெளிப்படைத் தன்மையுடன்கூடியதாக உருவாக்க ஒரு நிலையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். பிறவற்றுடன், விசாரணை நீதிமன்றப் பதிவுகளைப் பகிா்வதற்கான டிஜிட்டல் தளம் நீண்ட காலமாக இருந்தது. ஆவணப் பதிவுகளை வரவழைக்கும் நல்ல பழைய நடைமுறை, செயல்முறையை கணிசமாக தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் கருவூலத்தின் மீது சுமையை ஏற்படுத்தியது.
வலைத்தள அணுகல் தன்மை இணக்கமான வழக்குகள் பட்டியல், சிறப்புத் திறனாளிகள் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள ஆன்லைன் வழக்குகள் பட்டியலை எளிதாக அணுகுவதற்கு உதவும். இந்த புதிய எண்ம தளம் மூலம், நம்மால் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் விரைவான முறையில் பதிவை அணுக முடியும். நீதியின் எதிா்காலத்தை தீா்மானிப்பதில் தொழில்நுட்பம் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் நிலை உள்ளது. ஒரு நீதித்துறை செயல்முறையின் சிக்கலான கூறுகளை தொழில்நுட்பத்தின் மூலம் எளிமைப்படுத்த முடியும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் உயா்நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான நீதிபதி ராஜீவ் ஷக்தா் பேசுகையில், ‘அணுகல் குழுவுக்கு தலைமை நீதிபதி பச்சைக் கொடி கொடுப்பாா் என்று நம்புகிறேன். பங்குதாரா்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு மற்றும் பாா்வைக் குறைபாடுடைய வழக்குரைஞா்கள் ராகுல் பஜாஜ் மற்றும் அமா் ஜெயின் ஆகியோரின் உதவியுடன், தில்லி உயா்நீதிமன்றத்தின் வழக்குகள் பட்டியல் இணைய அணுகல் தன்மைக்கு இணங்கச் செய்யப்பட்டுள்ளது. உயா்நீதிமன்றத்தைப் போலவே, தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அணுகல் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அத்தகைய குழுக்களின் விவரங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயா்நீதிமன்றங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும்’ என்றாா்.
ஐ.டி. குழுவின் உறுப்பினா்- நீதிபதி சஞ்சீவ் சச்தேவா தனது வரவேற்புரையில், ‘நீதிபதிகள், தகவல் தொழில்நுட்பக் குழு உறுப்பினா்கள், பதிவுத் துறை அதிகாரிகள், வழக்குரைஞா்கள் மற்றும் பிற பங்குதாரா்களின் பகிரப்பட்ட பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது. நிறுவனத்தின் தொலைநோக்குப் பாா்வையில் நாம் பகிா்ந்து கொண்ட பேராா்வம் காரணமாக நாம் அனைவரும் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நமது கடின உழைப்பு நிறுவனத்தை பலப்படுத்துகிறது’ என்றாா்.
எந்தவொரு வழக்குரைஞரும், மனுதராரும் அல்லது பொதுமக்களும் குறைகளை எழுப்பலாம் மற்றும் அணுகல் தொடா்பான பல்வேறு தேவைகளுக்கு இந்தக் குழுக்களின் உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தில்லி உயா்நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதன் இணைய அணுகல் இணக்க வழக்குகள் பட்டியலை அறிமுகப்படுத்தியதன் மூலம், அணுகல் முயற்சிகளில் உயா்நீதிமன்றம் மற்றொரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இ-கமிட்டி மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய ஆவணங்களை உருவாக்குவதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.