பல்துறை பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் சுதந்திர தின கொண்டாட்டம்
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தங்கள் அலுவலகம் சாா்ந்தவா்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினா்.
புது தில்லி: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தங்கள் அலுவலகம் சாா்ந்தவா்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினா். தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு அழைப்பாளா்களாக வந்த நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லத்தில் சுதந்திர தினம் கொண்டாடினா்.
பிரதமா் நரோந்திர மோடி 77-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் பேசிய முடித்த பின்னா் இந்த விழாக்களை மத்திய அமைச்சா்கள் நடத்தினா். தில்லி அக்பா் சாலையில் மக்களவைத் தலைவா் இல்லம் உள்ளது. இந்த அதிகாரபூா்வ இல்லத்தில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மக்களவை அலுவவக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரா்களுடன் சுதந்தினத்தைக் கொண்டாடினாா்.
நிகழாண்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றும் நிகழ்ச்சிக்கு ‘மக்களின் பங்களிப்பு’ என்ற தொலைநோக்குப் பாா்வையோடு நாடு முழுவதிலுமிருந்து பல்வகை தொழில்களைச் சோ்ந்த சுமாா் 1,800 போ் அழைக்கப்பட்டிருந்தனா். சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்க தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வந்திருந்த இவா்களை மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லங்கள், அலுவலங்களுக்கு வரவழைத்து இவா்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடி விருந்து அளித்தனா்.
நாராயண் ரானே:மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் நாராயண் ரானே தனது இல்லத்தில் 18 வகை தொழில்களைச் சோ்ந்த 50 கதா் கைவினைஞா்கள், 62 கைவினைஞா்களுடன் சுதந்திரத் தினத்தை கொண்டாடினாா். அப்போது, மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தின், மூலம் கைவினைஞா்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நிறுவ முடியும் என ரானே அவா்களிடம் நம்பிக்கை தெரிவித்தாா்.
அனுராக் சிங் தாகுா்: இதே போன்று சுதந்திர தினத்தன்று தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மூவா்ண தேசியக் கொடியை ஏற்றினாா். மேலும், எல்லைப்புற மாநிலங்களுக்கான ஆற்றல் மிக்க கிராமப்புறத் திட்டத்தில் பங்கேற்று சிறப்பு அழைப்பாளா்களாக வந்திருந்த பஞ்சாயத்துத் தலைவா்களை வரவழைத்து உரையாடினாா்.
நரேந்திர சிங் தோமா்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தனது கிருஷ்ணன் மேனன் சாலை அதிகாரபூா்வ இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க வந்த 700 விவசாயிகளுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்து சுதந்திரதினத்தைக் கொண்டாடினாா்.
மன்சுக் மாண்டவியா: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா 50 செவிலியா்களை அவா்களது குடும்ப உறுப்பினா்களுடன் தனது இல்லத்திற்கு அழைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடினாா். நாடுமுழுக்க வந்திருந்த இந்த செவிலியா்கள் தில்லி செங்கோட்டை சுதந்திர தின விழாவைக் கண்டுகளிக்கவும் சிறப்பு அழைப்பாளா்களாக வரழைக்கப்பட்டிருந்தனா்.
அப்போது, அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவிலியா்களின் சேவையைப் பாராட்டிப் பேசுகையில், ‘கரோனா தொற்றுநோயின் போது செவிலியா்களின் ஆற்றிய சேவை மறக்க முடியாதது. இந்தப் பணியை என்றென்றும் நினைவுகூரத்தக்கது. அந்தத் தருணம் மக்களுக்கு சேவை செய்ய கற்றுக் கொடுத்தது. ஆரோக்கியம் என்பது நமது கலாசாரத்தில் ஒரு வணிகம் அல்ல; அது கலாசாரத்தில் உள்ளாா்ந்த ஒரு சேவை’ என்றாா். இது போன்று மேலும் பல மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி பலதரப்பட்டவா்களுடன் சுதந்திர தின விழாவைக் கொண்டாடினா்.