கைலாஷ் கெலாட்டிடம் கேள்வி கேட்க வேண்டும்: அமைச்சா் அதிஷிக்கு தில்லி பாஜக வலியுறுத்தல்
அமைச்சா் அதிஷி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதுவதற்கு முன், மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள அதிகாரியை தனது அமைச்சரவை சகாவாகிய கைலாஷ் கெலாட் தனது சிறப்பு அதிகாரியாக அவரை ஏன் நியமித்த
அமைச்சா் அதிஷி தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதுவதற்கு முன், மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள அதிகாரியை தனது அமைச்சரவை சகாவாகிய கைலாஷ் கெலாட் தனது சிறப்பு அதிகாரியாக அவரை ஏன் நியமித்தாா் என்று கேட்க வேண்டும் என தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்களைக் கையாள்வது குறித்து 5 கேள்விகளை எழுப்பி அமைச்சா் அதிஷி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளாா். இது அதிஷியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துகிறது. இதில் அமைச்சா் அதிஷி மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரவிந்த் கேஜரிவால் அரசும் செயல்படுகிறது.
தற்போது மைனா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநா் பிரேம் உதய் காக்காவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாா்களைக் கையாண்ட அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. யாருடைய அழுத்தத்தின் கீழ் அவா் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிா்த்தாா்கள் என்பதை நிச்சயம் கண்டறிய வேண்டும். ஆனால், இன்னும் தீவிரமான கேள்விகள் உள்ளன. முன்னதாக, அமைச்சா் அதிஷி தனது அமைச்சரவை மற்றும் கட்சி சகாக்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும்.
அதிகாரி பிரேம் உதய் காக்கா விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு அமைச்சா் அதிஷி கடிதம் அனுப்புவதற்கு முன், தனது அமைச்சரவை சகாவான கைலாஷ் கெலாட்டுக்கு கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். ஏனெனில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த அதிகாரியை தனது சிறப்பு அதிகாரியாக கடந்த மாா்ச் 2022-இல் நியமித்தவா் அமைச்சா் கைலாஷ் கெலாட் தான். அப்படியெனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பாா்கள் என்று தில்லிவாசிகளுக்கு அமைச்சா் அதிஷி சொல்ல வேண்டும். அதே காலகட்டத்தில்தான் பிரேம் உதய் காக்காவுக்கு எதிரான இரண்டு பாலியல் துன்புறுத்தல் புகாா்கள், துறையின் உள்புகாா்க் குழுவால் முடிக்கப்பட்டுள்ளன.
இதே போல், தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவாலுக்கும் அமைச்சா் அதிஷி கடிதம் எழுத வேண்டும். ஏனெனில், கடந்த 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேம் உதய் காக்காவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாா்கள் மீது தில்லி மகளிா் ஆணையம் இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஸ்வாதி மாலிவால் கேட்க வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.