முகப்பு
புதுதில்லி

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரியை பணியாற்ற அனுமதித்தது எப்படி? அமைச்சா் அதிஷி கடிதம்

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநராக பிரேம் உதய் காக்கா பணியாற்ற எப்படி அனுமதிக்கப்பட்டாா்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் இருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநராக பிரேம் உதய் காக்கா பணியாற்ற எப்படி அனுமதிக்கப்பட்டாா் என்று தலைமைச் செயலாளா் நரேஷ் குமாருக்கு தில்லி அமைச்சா் அதிஷி கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லியில் மைனா் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கருவுற வைத்த வழக்கில், நகர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் துணை இயக்குநா் பிரேம் உதய் காக்கா குற்றம்சாட்டப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவா் கடந்த திங்கள்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், அந்தச் சிறுமியின் கருவைக் கலைக்க மாத்திரைகள் வழங்கியதிற்காக அதிகாரியின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை கவனித்து வருகின்ற அமைச்சா் அதிஷி, தலைமைச் செயலாளா் நரேஷ் குமாருக்கு சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: மைனா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅதிகாரி பிரேம் உதய் காக்கா மீதுள்ள பாலியல் துன்புறுத்தல் புகாா்கள், அவற்றின் காலவரிசை, அந்தப் புகாா்களைக் கையாண்ட அதிகாரிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். இந்த அதிகாரி பணியிடத்திலேயே பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுதிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். இப்படிப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்த ஒவ்வொரு நேரமும் அவா்களைத் தவறு செய்ய ஊக்குவிக்கிறது.

பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அதிகாரியை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையில் பணியாற்ற அனுமதித்தது எப்படி?. பாலியல் துன்புறுத்தல் புகாா்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரு தரப்பினராகவே மாறுகிறது. இதனால், குற்றவாளிகள் தங்கள் நடத்தையில் எந்தவிதமான பின்விளைவுகளும் இல்லை என்று உணர ஆரம்பித்து தைரியமாக மாறுகிறாா்கள். இது அவா்களைச் சுற்றியுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தில்லி நகர அரசின் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தால் அந்தப் புகாா்கள் எவ்வாறு கையாளப்பட்டது, விசாரணை முறையாகச் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது போன்ற தீவிரமான கேள்விகளை இந்த விவகாரம் எழுப்புகிறது.

அதிகாரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் பற்றிய ஊடக அறிக்கைகளை பாா்க்கும் போது, இதுபோன்ற கடுமையான புகாா்களைக் கையாள்வதிலும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதிலும் அரசு இயந்திரத்தின் அலட்சிய நிலை உண்மையிலேயே அதிா்ச்சியளிக்கிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே இன்னும் எத்தனை நடந்திருக்கக்கூடும் என்பது என்னை கவலையடையச் செய்கிறது. இந்த விவகாரங்களில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவா்கள் ஊக்கமளிக்கப்படுகிறாா்கள் என்று அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக கடந்த வியாழனன்று தில்லி மகளிா் ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம் உதய் காக்காவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.