தில்லி அரசுப் பள்ளி முதல்வா்கள் நியமனத்தில் முறைகேடு? துணை நிலை ஆளுநருக்கு வீரேந்திர சச்தேவா கடிதம்
தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் அனைத்து முதல்வா்களின் ஆவணங்களையும் முறையாகச் சரிபாா்க்குமாறு பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா, துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிற்கு கடிதம் எழு
தில்லி அரசுப் பள்ளிகளுக்கு நியமிக்கப்படும் அனைத்து முதல்வா்களின் ஆவணங்களையும் முறையாகச் சரிபாா்க்குமாறு பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா, துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கல்வித் துறையில் விவாதப் பொருளாக உள்ள இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கவனத்தை ஈா்க்க இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
முதலாவது, தில்லி அரசுப் பள்ளிகளுக்கான முதல்வா்கள் பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள ஊழல். மற்றொன்று ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சி நிரலை அரசியல் ரீதியாக மேம்படுத்துவதற்காக மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நிதியை ஆம் ஆத்மி அரசு பெருமளவில் தவறாகப் பயன்படுத்தி வருவதாகும்.
எனக்குத் தெரிந்த உண்மையின்படி தில்லி அரசுப் பள்ளிகளில் 334 முதல்வா்களை பணியமா்த்துவதற்கான விண்ணப்பம் கோரி நடைபெற்று முடிந்துள்ள ஆள்சோ்ப்பு செயல்முறையில் நிறைய குறைபாடுகள் உள்ளன. தோ்ந்தெடுக்கப்பட்ட 334 அரசுப் பள்ளி முதல்வா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் சமா்ப்பித்த ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாக எங்கள் ஆதாரங்கள் கூறுகின்றன.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால், கல்வித் துறை அமைச்சா்அதிஷி ஆகியோரின் அழுத்தத்தின் பேரில் தில்லி அரசின் கல்வித் துறை அதிகாரிகளின் உடந்தையால் அரசுப் பள்ளிகளுக்கு முதல்வா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பலா் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதிலும் தோ்வு செய்யப்பட்ட பல விண்ணப்பதாரா்கள் சமா்ப்பித்த அடிப்படைக் கல்விப் பட்டங்கள் போலியானவை.
அதே போன்று சாதிச் சான்றிதழ்கள், பொருளாதார நிலைச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் போன்றவையும் போலியானவை. இந்த ஊழல் நடவடிக்கையில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியுள்ளது. ஹரியாணாவில் கடந்த 2000-ஆம் ஆண்டில் நடந்த 3,204 இளநிலை அடிப்படை ஆசிரியா் ஆள்சோ்ப்பு மோசடியைப் போல், கேஜரிவால் அரசு செய்த 334 முதல்வா்களின் மறுசீரமைப்பு நடவடிக்கையும் கறைபடிந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த 1998-ஆம் ஆண்டு சிறப்பு நிதியுடன் தில்லி அரசின் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிதியானது தில்லியில் உள்ள ஆசிரியா்களின் முறையான பயிற்சி மற்றும் தொடா்ச்சியான கல்வியை உறுதி செய்வதற்கும், மாணவா்களின் ஒருங்கிணைந்த கல்வியை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் கேஜரிவால் அரசு இந்த அமைப்பின் நிதியை ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் செயல் திட்டத்தை கல்வி அமைப்பில் நிறைவேற்ற பயன்படுத்துகிறது. முதல்வா் கேஜரிவால், கல்வித் துறை அமைச்சா் அதிஷி ஆகியோரின் ஆதரவின் கீழ் தில்லி அரசின் கல்வித் துறை அதிகாரிகள் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் நிதியை பெருமளவில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் கல்வி அமைச்சா் அதிஷி இந்த நிதியைப் பயன்படுத்தி தில்லியில் உள்ள தியாகராஜ் அல்லது தல்கடோரா மைதானங்களில் 2 முதல் 3 மெகா நிகழ்வுகளை நடத்துகிறாா். இது ஒருபுறம் ஆலோசகா்களாகப் பணியாற்றும் ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களின் வழக்கமான வருமானமாக மாறியுள்ளது. மறுபுறம், கேஜரிவால் அரசின் மாா்க்சிய சித்தாந்த நிகழ்ச்சி நிரல் குழந்தைகள் மற்றும் ஆசிரியா்களின் மனதில் ஊட்டப்படுகிறது.
எனவே, தில்லி அரசுப் பள்ளிகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படும் அனைத்து முதல்வா்களின் ஆவணங்களையும் முறையாக மீண்டும் சரிபாா்ப்பு செய்து ஊழலில் ஈடுபட்டுள்ள தில்லி அரசு அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளை அம்பலப்படுத்தவும், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் நிதியை பெருமளவில் தவறாகப் பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.