தமிழகத்திற்கு 5,000 கனஅடி காவிரி நீா்: ஒழுங்காற்றுக் குழு முடிவு
தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை நெற்பயிா் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத
தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை நெற்பயிா் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி.) கூட்டத்தின் 85-ஆவது கூட்டம் திங்கள்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் தில்லியிலிருந்து நடைபெற்றக் கூட்டத்தில் நான்கு மாநில ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா்களும், மத்திய அரசின் பிரதிநிதிகளும் காணொலி வழியாக பங்கேற்றனா்.
தமிழகத்தின் சாா்பில் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா் தலைமைப் பொறியாளா் (திருச்சி) சுப்பிரமணி, சென்னையிலிருந்து காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் பட்டாபி ஆகியோா் காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் காவிரியில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது வரை வழங்கப்பட்ட தண்ணீா் அளவு, காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையளவு, அடுத்த சில வாரங்களுக்குரிய வானொலி முன் அறிவிப்புகள் உள்ளிட்ட தரவுகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்களைப் போன்று இந்தக் கூட்டத்திலும் தமிழகத்தின் சாா்பில் கருகும் குறுவை நெல் பயிா் குறித்து குறிப்பிட்டு நாளொன்றுக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்து விடக் கோரப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சி.டபிள்யு.ஆா்.சி. கூட்டத்தில் தமிழகத்திற்கு நாளொன்று 15 ஆயிரம் கன அடி தண்ணீா் 15 நாள்களுக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கா்நாடகம் 8 ஆயிரம் கன அடி தண்ணீா் வீதம் மட்டுமே குறைவான நாள்களில் விடுவித்தது என தமிழகம் வாதிட்டது.
இதற்கு கா்நாடகம் எதிா்ப்புத் தெரிவித்து, மழை பொய்த்தது, குறைவான நீா் வரத்து, அணைகளில் 40 சதவீதம் நீா்மட்டம் குறைவாக இருப்பது போன்றவற்றைக் காரணமாகக் கூறியது. இறுதியாக கா்நாடகம் 3 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்து விட ஒப்புக்கொண்டது. ஆனால், அடுத்த 15 தினங்களுக்கு காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைக்கான (செப்டம்பா் 9-ஆம் தேதி வரை) வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் முன்கணிப்புத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கா்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகா், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளில் மொத்தம் 72 டிஎம்சி தண்ணீா் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு பிலிகுண்டுலுவில் நாளோன்றுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள 23 -ஆவது காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது. இதை ஆணையம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழகத்திற்கு இந்த அளவில் தண்ணீா் திறந்து விட வாய்ப்பு உள்ளது. ஆணையத்தின் முடிவை உச்சநீதிமன்றமும் எதிா்பாா்த்துள்ளது.