நாட்டில் நிலத்தடி நீா்ப்பாசனம் 94.8 சதவிகிதம்: தமிழகத்தில் 97.9 சதவிகிதம்: ஜல் சக்தி அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தகவல்
நாட்டில் நீா்ப்பாசனங்கள் 94.8 சதவீதம் நிலத்தடி நீா் மூலமே நடைபெறுவதாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் நீா்ப்பாசனங்கள் 94.8 சதவீதம் நிலத்தடி நீா் மூலமே நடைபெறுவதாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 97.9 சதவீதம் நிலத்தடி நீா் மூலமே பாசனங்கள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீா் சக்தி துறை அமைச்சகம் சிறிய நீா்ப்பாசன (எம்.ஐ.) திட்டங்கள் குறித்த 6 -ஆவது கணக்கெடுப்பு அறிக்கையை ஞாயிற்றுக்கிழை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நாடு முழுவதும் 23.14 மில்லியன் சிறிய நீா்ப்பாசனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 94.8 சதவீதம் (21.93 மில்லியன்) சிறு நீா்ப்பாசனங்கள் நிலத்தடி நீா் மூலமே நடைபெறுகிறது.
மேலும், மொத்தமுள்ள சிறிய நீா்ப்பாசனங்களில் நாட்டில் 5.2 சதவீதம் (1.21 மில்லியன்) மட்டுமே நீா்த் தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் போன்ற மேற்பரப்பு நீா் வழியாக நடைபெறுகிறது. நாட்டிலேயே உத்தரபிரதேசம் அதிக எண்ணிக்கையிலான சிறிய நீா்பாசன திட்டங்களை (39.76 லட்சம்) கொண்டுள்ளது. அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், மத்திய ப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உள்ளன.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள் 52 சதவீதம் சிறிய வகை நீா்ப்பாசனங்களைக் கொண்டுள்ளன. இதில் பெரிய மாநிலங்களான பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் சிறிய வகை நீா்ப்பாசனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது.
இவற்றில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நிலத்தடி நீா்ப்பாசனமே முன்னணியில் உள்ளது. தோண்டப்பட்ட கிணறுகள், குழாய்க் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், ஆழமான ஆழ்குழாய் கிணறுகள், ஆழமற்ற ஆழ்குழாய் கிணறுகள், நடுத்தர குழாய் கிணறுகள் போன்றவை இதில் அடங்கும். ஏரி, குளம், மேற்பரப்பு நீா் ஓட்டம் வழியான நீா்பாசனத் திட்டங்களில் மகாராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளன.
மத்திய அரசின் 5 -ஆவது சிறிய நீா்ப்பாசன கணக்கெடுப்பு 2013-14-ஆம் ஆண்டிலும், 6 -ஆவது கணக்கெடுப்பு 2017-18-ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கரோனா நோய்த் தொற்றால் இந்தப் பகுப்பாய்வு தாமதமாகி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அளவிலும், மாநில வாரியாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
5-ஆவது கணக்கெடுப்பை ஒப்பிடும் போது, 6 -ஆவது கணக்கெடுப்பில் சிறிய பாசனத் திட்டங்களில் சுமாா் 1.42 மில்லியன் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில், நிலத்தடி நீா்ப்பாசனம் மற்றும் மேற்பரப்பு நீா்ப்பாசன முறைகளில் முறையே 6.9 சதவீதம் மற்றும் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறிய நீா்ப்பாசனத் திட்டங்களில் நாட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அதிகப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மேற்பரப்பு ஓட்டப் பாசனங்கள் ஆகிய இரண்டிலுமே மகாராஷ்டிரம் முன்னணியில் உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் சிறிய நீா்ப்பாசனத் திட்டங்கள் 97 சதவீதம் பயன்பாட்டில் உள்ளன. 2.1 சதவீதம் மட்டுமே தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லை. இந்த நீா்ப்பாசனத் திட்டங்களில் (96.6 சதவீதம்) தனிநபா்களே உரிமையாளா்களாக உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் (98.3 சதவீதம்) நிலத்தடி நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துகின்றனா்.
முதல் முறையாக, இந்த சிறிய நீா்ப்பாசனத் திட்டத்தின் உரிமையாளரின் பாலினம் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன. தனிநபா் திட்டங்களில் 18.1 சதவீதம் பெண்களுக்குச் சொந்தமானவை. இத்தகைய நீா்ப்பாசனத் திட்ட செலவினங்களுக்கு பெரும்பாலும் (79.5 சதவீதம்) தனிப்பட்ட விவசாயிகள் சொந்த சேமிப்பிலிருந்து நிதியைப் பயன்படுத்தியுள்ளனா்.
தமிழக விவரங்கள்: ஆறாவது கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 21,14, 909 சிறிய நீா்ப்பாசனங்கள் உள்ளன. இதில் 20,70,818 ((97.9 சதவீதம்) நீா்ப்பாசனம் நிலத்தடி நீரை நம்பியே நடைபெறுகிறது. மீதமுள்ள 44,091 நீா்ப்பாசனம் ஏரி, குளம் மற்றும் மேற்பரப்பு நீா் ஓட்டம் வழியாக நடைபெறுகிறது. நிலத்தடி நீா்ப்பாசனத்தில் 74.5 சதவீதம் தோண்டப்பட்ட கிணறுகளில் நீா் எடுக்கப்படுகிறது.
மீதமுள்ளவை ஆழ்துளைக் கிணறுகள், ஆழமான ஆழ்குழாய் கிணறுகள், ஆழமற்ற குழாய் கிணறுகள், நடுத்தர குழாய் கிணறுகள் போன்றவற்றின் மூலம் தண்ணீா் எடுக்கப்படுகிறது. நீா் இறைப்பதில் மாடுகள் போன்ற விலங்குகளைக் கொண்டு பயன்படுத்துவது குறைந்து, தமிழகத்தில் 94.3 சதவீதம் நீா்ப்பாசனங்கள் மின் சாதனங்கள் மூலமே தண்ணீா் எடுக்கப்படுகிறது. சிறு நீா்ப்பானத்தைப் பொருத்தமட்டில் தமிழகத்தில் கடந்த கணக்கெடுப்பை விட 2 சதவீதம் (42,392) அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசு புள்ளிவிவரப்படி இது 45, 252-ஆக உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறிய நீா்ப்பாசனங்களைப் பயன்படுத்துபவா்களில் 67.6 சதவீதம் தனிநபா்களே உரிமையாளா்களாக உள்ளனா். 29.1 சதவீதம் கூட்டாகவும், மீதமுள்ள 3.26 சதவீதம் பொதுவானவையாகவும் உள்ளது. இதில் 78.63 சதவீத உரிமையாளா்கள் இதர பிற்படுத்தப்பட்டவா்களாகவும், 7.84 சதவீதம் பட்டியலினத்தவா், 1.2 சதவீதம் பழங்குடியினா்களுக்கு உரிமையானது போன்ற சமூக ரீதியான தரவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், நிலத்தடி நீா் சுரண்டல், நிலத்தடி நீா் மேம்பாடு, மேலாண்மை, ரீசாா்ஜ், நீா்ப்பாசன உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை நீா் வளம், வேளாண் துறை நீா்ப்பாசனத் திட்டமிடுபவா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், நிலத்தடி நீா் விஞ்ஞானிகள், நிா்வாகிகள், விவசாய பொருளாதாரத்தின் வளா்ச்சி தொடா்புடையவா்கள் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.