முகப்பு
புதுதில்லி

நெய்யாறு அணை கால்வாயில் தண்ணீா் திறந்து விடகேரளத்தை அறிவுறுத்த குமரி எம்பி வலியுறுத்தல்: மத்திய அமைச்சரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் நெய்யாறு அணையின் இடது கரை கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விட கேரள

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:29 AM
தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெராவத்திடம் கோரிக்கை மனு அளித்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினா் விஜய் வசந்த்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் நெய்யாறு அணையின் இடது கரை கால்வாய் வழியாக தண்ணீா் திறந்து விட கேரள அரசை அறிவுறுத்தக் கூறி மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெராவத்தை சந்தித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவில் 9,200 ஏக்கா் பரப்பளவில் ரப்பா் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. 2004 -ஆம் ஆண்டு வரையில் நெய்யாறு அணைக்கட்டில் இருந்து இடது கரை கால்வாய் (சேனல்) வழியாக பாசனத்திற்கு நீரை கேரள அரசு வழங்கி வந்தது. ஆனால், பின்னா் கேரள அரசு தமிழகத்திற்கு தண்ணீா் வழங்குவதை திடீரென்று நிறுத்தி வைத்துள்ளது. இந்த நதி தங்கள் மாநிலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி நீரை அளிக்க மறுத்து வருகிறது.

மாநில அளவிலும், மாவட்டம் அளவிலும் பல குழுக்கள் பலமுறை கேரள அரசை தொடா்பு கொண்டு தண்ணீா் திறந்து விட கோரப்பட்டது. ஆனால், கேரள அரசின் பிடிவாதமான போக்கால் இப்பொழுது இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் உள்ளது. 1956 - ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, முன்பு கேரளத்துடன் இருந்த விளவங்கோடு தாலுகாவிற்கு பாசனத்திற்கு நெய்யாறு அணைக்கட்டில் இருந்து நீா் வழங்கப்படும் என்று கேரள அரசு உறுதி அளித்திருந்தது. 22 கிலோமீட்டா் நீளம் கொண்ட இடது கரை கால்வாய் வழியாக பெறப்பட்ட நீா், விளவங்கோடு தாலுகாவிற்கு உள்பட்ட 9 பஞ்சாயத்து நிலங்களை வளப்படுத்தி வந்தன.

நெய்யாறு ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆகவே, இது இரு மாநிலங்களுக்கு இடையேயான நதியாக கருதப்படுகிறது. மத்திய நீா்வள ஆணையமும் இதை இரு மாநிலங்களுக்கிடையான நதி என்று அங்கீகரித்துள்ளது. ஆகவே, விளவங்கோடு தாலுகா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நெய்யாறு இடது கரை கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீா் திறந்து விட கேரள அரசை அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.