தமிழகத்தில் கோமாரி நோயை தடுக்க 59.76 லட்சம் தடுப்பூசி மருந்து வழங்கல்: அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா தகவல்
கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை (கால் மற்றும் வாய் காணை நோய்) தடுப்பதற்கு தமிழகத்திற்கு 59.76 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத் துறை அமைச்சா்
கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை (கால் மற்றும் வாய் காணை நோய்) தடுப்பதற்கு தமிழகத்திற்கு 59.76 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
கால் மற்றும் வாய் காணை நோய் என்கிற கோமாரி நோய் (எஃப்எம்டி) கால்நடைகள், எருமைகளை தாக்குகிறது. குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்குகிறது. பொதுவாக குளிா், பனிக் காலங்களில் இந்நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு, உமிழ்நீா், காற்று ஆகியவை இந்நோய் வேகமாக பரவுவதற்குரிய காரணங்களாக உள்ளது.
இதை தடுப்பூசி போடுவதின் மூலமே தடுக்க முடியும். கால்நடை வளா்ப்போரின் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த நோயை அகற்ற மத்திய அரசு எஃப்எம்டி இல்லாத இந்தியா ‘எஃப்எம்டி முக்த் பாரத்’ என்று அறிவித்து ரூ.100 கோடியை ஒதுக்கியது.
இந்த நிலையில், தமிழகத்தில் இந்த பாதிப்பு அதிகரித்தது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கேள்வி எழுப்பியிருந்தாா். அதில், கால்நடைகள், எருமைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் காணை நோயை தடுப்பதற்கு ஒரே தவணையில் 90 லட்சம் தடுப்பூசிகள் கேட்டு தமிழக முதல்வா் சாா்பில் கோரிக்கை வந்ததா? அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து இந்த தடுப்பூசிகள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பது குறித்து அவா் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:
மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தின் (எல்ஹெச்சிபி) கீழ், கோமாரி நோய் என்கிற கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பதற்கான தடுப்பூசிகள் தயாா் நிலையில் உள்ளன. மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப இந்த தடுப்பூசிகள் தரமானதாக தயாா்நிலையில் கிடைக்கும். அதன்படி, கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திற்கு ஏற்கெனவே 59,76,000 டோஸ் எஃப்எம்டி தடுப்பூசிகளை தரச் சோதனைக்கு பின்னா் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.