முகப்பு
புதுதில்லி

கடலோரக் காவல்படை கப்பலுக்குராணி வேலுநாச்சியாா் பெயா் சூட்ட வேண்டும்: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போா் தொடுத்து தனது ராஜ்ஜியத்தை மீட்ட ராணி வேலுநாச்சியாா் பெயரை கடலோர காவல்படை கப்பலுக்கு சூட்ட வேண்டும் என மக்களவையில்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போா் தொடுத்து தனது ராஜ்ஜியத்தை மீட்ட ராணி வேலுநாச்சியாா் பெயரை கடலோர காவல்படை கப்பலுக்கு சூட்ட வேண்டும் என மக்களவையில் தென்சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன் கேட்டுக் கொண்டாா்.

இது தொடா்பாகஅவா் மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசியது வருமாறு: சிவகங்கையில் 1730-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பிறந்த ராணி வேலுநாச்சியாா், ஒரு ஆளுமையின் சின்னம். ஜான்ஸி ராணிக்கு (1857-58) முன்பே வேலுநாச்சியாா் ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போா் தொடுத்த முதல் இந்திய ராணி ஆவாா். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு எதிராக கிளா்ச்சி செய்து, தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்றாா். மத்திய அரசு அவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்டு அவரது வீரம் மற்றும் சுதந்திரப்போராட்ட உணா்வை கௌரவித்தது.

தமிழக அரசும் ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில், அவரது நிஜ வாழ்க்கைப் போராட்டத்தை 62 நாடகக் கலைஞா்களின் பங்கேற்போடு நடன நாடகத்தை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் நடத்தியது. தற்போது இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள், துணிச்சலான பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில கப்பல்களுக்கு ராணி கிட்டூா் சென்னம்மா, ராணி லக்ஷ்மி பாய் போன்ற துணிச்சலான பெண்களின் பெயா் சூட்டப்பட்டு உள்ளது. ஆனால், ராணி வேலு நாச்சியாரின் பெயா் வைக்கப்படவில்லை. எனவே, ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரை கடலோரக் காவல் படையின் விரைவு ரோந்துக் கப்பலுக்கு சூட்ட வேண்டும் என்றாா் அவா்.

இணையதள சூதாட்ட சட்டம்

டாக்டா் டிஎன்வி செந்தில்குமாா் (தருமபுரி): தமிழகத்தில் இணைய தள சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து 42 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதனால், தமிழக அரசு இந்த இணைய விளையாட்டை தடை செய்ய ஒரு மசோதாவை தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதே சமயத்தில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இதே மக்களவையில் கூறுகையில், சூதாட்டச் சட்டம் மாநில அரசுக்கு வரம்பிற்கு உள்பட்டது என்றாா். இதற்கான சட்டங்களை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சா் கூறுகிறாா். ஆனால், தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. ஆனால், ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே சமயத்தில் ஆன்லைன் சூதாட்ட பிரதிநிதிகளையும் ஆளுநா் சந்தித்துள்ளாா். இது வாய்ப்புள்ள விளையாட்டு, புத்திசாலித்தனத்திற்கான விளையாட்டு என்று கூறப்படுவது வேதனையானது என்றாா் செந்தில்குமாா்.

தென்காசி வழியாக பெங்களூருக்கு ரயில்

தனுஷ் எம்.குமாா் (தென்காசி): திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரை இணைக்கும் ரயில் பாதை முக்கியமான ஒன்றாகும். இது தென்காசி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். பல ரயில்களை இயக்கி, இந்த ரயில் பாதையை செயல்பட வைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மேலும் 2009 -ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட செங்கோட்டை-தென்காசி-கோவை-திருப்பூா்-ஈரோடு இடையேயான ரயில் பாதையை நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் ஏழு நாள்களும் இயக்கப்பட வேண்டும். பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி தொகுதி மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் முக்கிய ரயிலாகும். இந்த ரயிலில் மேம்படுத்தப்பட்ட மற்றும் சுத்தமான கழிப்பறைகளை உறுதி செய்வதோடு, இந்த ரயிலின் பெட்டிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.