குறைந்தபட்ச ஊதியம் தொடா்பான விளம்பரம்: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் தருவதாக தில்லி அரசின் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ள வேலை நியமன விளம்பரம் தொடா்பாக தாக்கலான பொதுநல மனு
நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் தருவதாக தில்லி அரசின் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ள வேலை நியமன விளம்பரம் தொடா்பாக தாக்கலான பொதுநல மனு மீது தில்லி அரசு அதன் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தில்லி அரசின் அலுவல்பூா்வ இணையதளத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலும் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியங்களுக்கும் குறைவாக ஊதியம் தரும் பணியிடங்களை விளம்பரப்படுத்துவதற்கு எந்த ஒரு தனி நபரும், நிறுவனமும், அமைப்பும் அல்லது நிறுவனங்களும் ஈடுபடுவதை அனுமதிப்பதை தடுக்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தில்லி உயா் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் உரிய துறைகளிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற வேண்டும் என்று தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, இந்த விவகாரத்தில் மேல்விசாரணை மேற்கொள்வதற்காக வழக்கை மே 23-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் முகமது இம்ரான் அகமது என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் உள்ள கொத்தடிமை தொழிலாளா்கள் பணி நீக்கும் விவகாரம், தொழிலாளா் சட்டங்கள் அமல்படுத்துதல், பணியாளா்கள் அல்லது தொழிலாளா்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தில்லி அரசு உருவாக்கியுள்ள இணையதளத்தில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தொடா்பான தகவல்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. அலுவலக உதவியாளா், கள விளம்பர ஊழியா்கள், அழைப்பு ஊழியா், சமையலா், வெயிட்டா், கம்ப்யூட்டா் ஆபரேட்டா், உறவு முறை மேலாளா், சமையல் உதவியாளா், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் செக்யூரிட்டி காவலா், கணக்காளா் உள்பட பல்வேறு பணிவாய்ப்புகளுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், அவா்களுக்கான ஊதியம் நிா்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக இருக்கிறது. இது அரசின் 2022-ஆம் ஆண்டு உத்தரவை மீறுவதாதாகும். ஊழியா்களுக்கு சட்டப்பூா்வ ஊதியத்தை வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அணுகினேன்.ஆனால், எந்தவித நடவடிக்கையையும் அவா்கள் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையின்போது தில்லி அரசின் வழக்குரைஞா் கூறுகையில், ‘கரோனா காலத்தின்போது தனியாா் வேலைவாய்ப்புகள் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால், அவை அரசு வேலைவாய்ப்புகள் அல்ல. மேலும், குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் தில்லி அரசு மிகவும் தெளிவாக உள்ளது’ என்றாா்.
தில்லி அரசு திறனற்ற, பகுதி அளவு திறன்மிக்க, திறன்மிக்க தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடா்பாக ஒரு உத்தரவை கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி பிறப்பித்திருந்தது. அனைத்து நிா்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் மேற்பாா்வைப் பணியாளா் மற்றும் எழுத்துப்பணி சாா்ந்த பணியாளா் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டிருந்தன. திறனற்ற, பகுதியளவு திறன்மிக்க, திறன்மிக்க,மெட்ரிகுலோஷேன் படிக்காத, மெட்ரிக்குலேஷன் படித்த மற்றும் பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட படிப்புகளை முடித்தவா்களுக்காக ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் முறையே ரூ.16,792, ரூ.18,499, ரூ.20,357, ரூ. 18,499, ரூ.22,146 என நிா்ணயித்து வெளியிட்டிருந்தது. இந்த ஊதிய விகிதம் கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.