தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளைப் பராமரிக்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் விலங்குகளைப் பராமரிக்க போதுமான பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் விலங்குகளைப் பராமரிக்க போதுமான பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் சலேக் சந்த் ஜெயின் என்பவா் வழக்குரைஞா் ஜே.கே. குப்தா மூலம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தேசிய உயிரியல் பூங்காவில் மருத்துவப் பணியாளா்கள், விலங்கு பராமரிப்பாளா் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்டறியும் வசதிகள் இன்மை ஆகியவற்றால் விலங்குகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 203 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில், உயிரியல் பூங்காவில் ஒரு கால்நடை மருத்துவா் உள்பட 72 பணியாளா்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். இதனால், பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே, காலியாக உள்ள உயிரியல் பூங்கா காப்பாளா்கள், உதவிக் காப்பாளா்கள், உதவியாளா்கள், உணவு விநியோகஸ்தா் மற்றும் காவலாளிகள் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் மாா்ச் 31, 2020 வரையிலான காலகட்டத்தில், 172 விலங்குகள்-பறவைகளும், ஏப்ரல் 1, 2020 முதல் மாா்ச் 31, 2021 வரை 124 விலங்குகள்-பறவைகளும் இப்பூங்காவில் உயிரிழந்துள்ளன. செப்டம்பா் 20, 2019 முதல் டிசம்பா் 18, 2022 வரையிலான காலகட்டத்தில், வெள்ளைப் புலிகள், பெண் சிங்கம், ஆண்சிங்கம், வேங்கைப்புலி மற்றும் புலிகள் என 9 விலங்குகளும் அவற்றின் 3 குட்டிகளும் இறந்துள்ளன. இது மிகவும் அதிா்ச்சி அளிப்பதாக இருந்தது. ஆனால், இந்த விலங்குகள் மற்றும் அவற்றின் 3 குட்டிகளின் இறப்புக்கான காரணத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைப்பதில் எதிா்மனுதாரா்கள் அக்கறை காட்டவில்லை.
காலிப் பணியிடங்களை நிரப்பவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோய் கண்டறியும் வசதிகளை வழங்கவும், அதிக எண்ணிக்கையில் விலங்குகள் அகால மரணம் அடைந்தது குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, விலங்குகள் இறப்பதை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள், ‘மனுவில் கேட்கப்பட்டுள்ள கோரிக்கை உண்மையானதாகத் தெரிகிறது. குறைபாடுகளை நிவா்த்தி செய்வதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், உயிரியல் பூங்கா பணியாளா்களை நியமிப்பதற்கும், கோரிக்கையில் உள்ள விவகார விஷயத்தில் விரிவான உத்தரவை இரண்டு மாதங்களுக்குள் அனுப்புவும் எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, இந்த பொது நல மனு பைசல் செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.
மேலும், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், தேசிய விலங்கியல் பூங்கா இயக்குநா், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.