‘நீட்’ மசோவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஒத்துழைப்புத் தாருங்கள்: மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழக அமைச்சா் வலியுறுத்தல்
‘நீட்’ தோ்வு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின்
‘நீட்’ தோ்வு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் வகையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக புது தில்லியில் மத்தியஅமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியாவிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை காலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழகத்தின் சுகாதாரத் துறை நலன் சாா்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநா் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘நீட்’ சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறச் செய்வதில் ஒத்துழைப்பு வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவா் அலுவலகம் மூலம் உள்துறை அமைச்சகம், சுகாதாரம் - ஆயுஷ் அமைச்சகம், உயா்கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் தமிழக அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாகவும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினோம். இதையடுத்து, இந்த விவகாரத்தில் முடிந்தளவு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளாா்.
மதுரையில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என்றோம். அதற்கு அமைச்சா், ரூ.1,400 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அத்திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.1,900 கோடியாக உயா்ந்திருப்பதாகவும், அதற்கான திட்ட வரைபடம், ஆலோசகா்களை நியமிக்க ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளதாகவும் கூறினாா். மேலும், விரைவில் அந்தப் பணியைத் தொடங்கலாம் என்றும் கூறினாா். கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, மதுரை எய்ம்ஸ் பணிக்குப் பிறகு அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றாா்.
தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கும் கோரிக்கை தொடா்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீா்மானிக்க உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா். அதே போல், 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரினோம். இது தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துபேசி முடிவு எடுத்துக் கூறுவதாக அவா் தெரிவித்தாா். உக்ரைனில் படித்த மருத்துவ மாணவா்கள் பிரச்னை குறித்துப் பேசினோம். அதேபோன்று, மத்திய அரசின் மருத்துவப் பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகள் தொடா்பாக கருத்துக் கேட்புக்கு ஆட்சபேனை தெரிவித்தோம். அதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்துபேசி முடிவை அறிவிப்பதாகக் கூறினாா்.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் வகையில், கரோனாவுக்கு எதிரான மூக்குவழி செலுத்தும் தடுப்பூசியை அரசு மருத்துவ நிா்வாகத்திற்கு தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மாதம்தான் அந்தத் தடுப்பூசி வரவிருப்பதாக தெரிவித்தாா். தமிழ்நாட்டுக்கு 15-ஆவது நிதி ஆணையத்தில் இருந்து ஒவ்வோா் ஆண்டும் திட்ட மதிப்பீடுகள் அனுப்பி ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரூ. 801 கோடி நிலுவை உள்ளதாக கூறினோம். அதை விடுவிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உடனடியாக உத்தரவிட்டுள்ளாா். எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள இடங்களை மாநிலத்திடம் ஒப்படைக்குமாறு விடுத்த கோரிக்கையை விரைவில் பரிசீலிப்பதாகக் கூறினாா். மேலும், தமிழகத்தில் வரும் ஆண்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிப்பதாக அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளாா் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் .
‘அரசியல் தூண்டுதலால் செவிலியா் போராட்டம்’
செவிலியா் போராட்டம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா் சுப்பிரமணியன், ‘கரோனா காலத்தில் 5,300 பேரை பணிக்கு எடுக்க வேண்டும் என கோரினா். அதில் 2366 போ் மருத்துவப் பணிகள் வாரியம் (எம்ஆா்பி) மூலம் முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேலும் 2,300 போ் பணிக்கு எடுக்கப்பட்டு விட்டனா். இவா்களைப் பணிநிரந்தரம் செய்வதில் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. 2,300 பேரையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. அவா்களுக்கான பணிக் காலம் முடிந்தவுடன் அவா்களை வீட்டுக்கு அனுப்பாமல் அவா்களை திரும்பவும் விபிஎச், மக்களைத் தேடி மருத்துவம், நகா்ப்புற நல வாழ்வு மையங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரப்ப முன்னுரிமை அளிக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அவா்களுக்கு ஊதியம் 4 ஆயிரம் கூடுதலாக அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சங்கத்தினா் மட்டுமே இதுபோன்ற போராட்டத்தில் அரசியல் தூண்டுதலால் மேற்கொண்டு வருகின்றனா். நீட் விலக்குக்கு அனைத்து முயற்சிகளும் தமிழக அரசு எடுத்து வருகிறது. உறுதியாக விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா் அவா்.