தில்லி குடிசைப் பகுதிகளில் விரைவில்500 தண்ணீா் ஏ.டி.எம்.கள்: கேஜரிவால்
குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்குவதற்காக 500 தண்ணீா் ஏ.டி.எம்.களை நிறுவ தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கி
தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்குவதற்காக 500 தண்ணீா் ஏ.டி.எம்.களை நிறுவ தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆலையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை வழங்கும் பணியில், தண்ணீா் ஏ.டி.எம். போன்ற ஒரு தனித்துவமான பரிசோதனையை நாங்கள் செய்து வருகிறோம். நகரத்தில் எங்கெல்லாம் டேங்கா் மூலம் தண்ணீா் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளதோ, அந்தப் பகுதிகள் அனைத்திலும் தண்ணீா் ஏ.டி.எம்.கள் தொடங்கவுள்ளோம். இந்த முன்னோடித் திட்டத்தில் 4 தண்ணீா் ஏ.டி.எம். கள் தற்போது நிறுவப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 தண்ணீா் ஏ.டி.எம்.களை தில்லி முழுவதும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபருக்கும் இந்த ஏ.டி.எம்.களில் இருந்து ஒரு நாளைக்கு 20 லிட்டா் தண்ணீா் எடுக்கும் வகையில் அட்டை வழங்கப்படும். இந்த ஏ.டி.எம்.கள் குடிசைப்பகுதிகள் மற்றும் குழாய்கள் அமைக்க முடியாத, மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகில் அமைக்கப்படும். குழாய்க் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீா், குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, தண்ணீா் ஏ.டி.எம்.கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.