முகப்பு
புதுதில்லி

யமுனை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள்: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

தில்லி பகுதி யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிகழ் மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
பகிர்:

தில்லி பகுதி யமுனை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிகழ் மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தது.

தில்லியில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் இலவச ரேஷன், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி செளரப் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கவும், அவா்களுக்கு தங்குமிடம் வழங்கவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்தாா். அப்போது, இந்த விவகாரம் தொடா்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கை மேலும் விசாரிக்க செப்டம்பா் 13-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது, தில்லி அரசின் தரப்பில் இந்த மனுவுக்கு எதிராக கடுமையான ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டது. அரசு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்த மனு எவ்வித கவனமும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலில் அதிகாரிகளை அணுகியிருக்க வேண்டும். அதுவும் இல்லை. எதுவும் செய்யாதது போல் இருப்பதாக இந்த மனு பிரதிபலிக்கிறது’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியா் முனைவா் ஆகாஷ் பட்டாச்சாா்யா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் கே.ஆா். ஷியாஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமாா் 25,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் முறையான சுகாதார வசதிகள் மற்றும் உணவு இல்லாததாக புகாா்கள் உள்ளன.

வெள்ள மேலாண்மை என்பது மாநிலப் பொருள் பட்டியலில் இருப்பதால், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு மாநிலங்களின் மீது உள்ளது.

முன்னெப்போதும் இல்லாத யமுனை வெள்ளப்பெருக்கால் யமுனை வெள்ள சமவெளிப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடற்றவா்களாகியுள்ளனா். ஆபத்தான மற்றும் முன்எப்போதும் இல்லாத சூழ்நிலையில், தில்லியின் அரசு இயந்திரம் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கத் தவறிவிட்டது.

இதனால், பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த வெள்ளத்தை இயற்கைப் பேரிடராக அறிவிக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை ஆய்வு செய்ய ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கவும், ஒவ்வொரு முகாமிலும் பாதிக்கப்பட்டவா்களின் கணக்கெடுப்புகளை நடத்தவும், உடைமைகள் மற்றும் தங்குமிடங்களை இழந்தவா்களுக்கு உடனடியாக ரூ. 50,000 ரொக்க உதவி வழங்கவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், இலவச ரேஷன், வெள்ளத்திற்குப் பிந்தைய தொற்றுநோய்கள்மற்றும் நீரால் பரவும் நோய்களைத் தடுக்க மருத்துவ உதவிகள், சுகாதார வசதிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.