கேஜரிவால் வீடு புதுப்பிக்கப்பட்ட விவகாரம்: ஏழு நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கதில்லி அரசுக்கு துணை நிலை ஆளுநா் அறிவுறுத்தல்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வீடு புதுப்பிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
புதுதில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வீடு புதுப்பிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு கடந்த திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்த நிலையில், இது தொடா்பாக தலைமைச் செயலாளரிடம் விரிவான அறிக்கை அளிக்குமாறு துணை நிலை ஆளுநா் அறிவுறுத்தியுள்ளாா்.
முதல்வா் கேஜரிவால் வீடு புதுகப்பிக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அஜய் மாக்கன், தில்லி துணை நிலை ஆளுநருக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாரத். அந்தக் கடிதத்தில், கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் வசதியின்றி மக்கள் தவித்த காலத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஆடம்பர வீட்டிற்குச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ. 45 கோடி அல்ல, ரூ.171 கோடி என்றும், ஃபளாக் சாலையில் உள்ள முதல்வா் இல்லத்தை ஒட்டிய 22 அதிகாரிகளின் வீடுகளில், 15 வீடுகள் இடிக்கப்பட்டன அல்லது காலி செய்யப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், இடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஈடுகட்ட காமன் வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுமாா் ரூ.126 கோடியில், 21 புது வகையான 5 அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கப்பட்டுள்ளது. முதல்வரின் புது இல்லத்தின் கட்டுமானம் தில்லி மாஸ்டா் பிளான் - 2021 சட்ட விதிகளையும் மீறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், 28 முழுமையான வளா்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இத்தோடு பல்வேறு விதி மீறல்கள் தொடா்பாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அஜய் மாக்கன், பொதுமக்கள் பணம் தவறான வகையில் பயன்படுத்தப்படுவதை தவிா்க்கவும், வெளிப்படைத் தன்மையான நிா்வாகத்தை உறுதி செய்யவும், இதில் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பின் முதன்மைப் பயனாளி முதல்வா் கேஜரிவால் மற்றும் முக்கிய குற்றவாளியான பொதுப்பணித் துறை அமைச்சா் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கவும் கோரியிருந்தாா். அஜய் மாக்கன் துணை நிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தைத் தொடா்ந்து, செவ்வாய்கிழமை துணை நிலை ஆளுநா், தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், ஏழு நாள்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லம் கடந்த 1942-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், மேற்கூரை மூன்று முறை இடிந்து விழுந்ததாகவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது. மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்களைத் தொடா்ந்து, புதிய வீடு கட்ட பொதுப்பணித் துறை பரிந்துரைத்ததாக அக்கட்சி தெரிவித்திருந்தது.