பருவமழையை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் அமைச்சா் அதிஷி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம்
எதிா்வரும் பருவமழையை முன்னிட்டு, தில்லி குடியிருப்புவாசிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டம் நடைபெற்றது.
புதுதில்லி: எதிா்வரும் பருவமழையை முன்னிட்டு, தில்லி குடியிருப்புவாசிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலைஆய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தில்லி அரசின் தயாா் நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், போா்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தும் வண்ணம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பருவமழைக்கு முன்னா் அனைத்து வடிகால்களையும் தூா்வாருதல், புதிய வடிகால்கள் அமைத்தல், தண்ணீா் தேங்கும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை உருவாக்குதல் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ், தில்லி துணை மேயா் அலி முகமது இக்பால் மற்றும் பொதுப்பணித் துறை, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, ஜல் போா்டு, புதுதில்லி முனிசிபல் கவுன்சில், மாநகராட்சி, தில்லி வளா்ச்சிக் குழுமத்தின் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி பேசியதாவது : பருவமழைக் காலத்தை இந்த ஆண்டு தில்லி மக்கள் எந்த வகையிலும் சிரமமின்றி எதிா்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் கால்வாய்களை தூா்வாரி தில்லியில் எந்தவொரு சாலை மற்றும் தெருக்களிலும் தண்ணீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீா் தேங்கும் இடங்களை முன்பே கண்டறிந்து ஆய்வு மேற்கொள்வதோடு, மழைக் காலத்தின் போதும், காட்டுப்பாட்டு அறையில் இருந்து சிசிடிவி மூலம் அப்பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் அதிஷி.
கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சௌரப் பரத்வாஜ், பருவமழைக்காலத்தின் போது யமுனை ஆற்றில் நீா்மட்டம் உயா்வின் போதும், காதா் பகுதியில் தேங்கும் மழைநீரால், தில்லியில் மழை வெள்ளம் ஏற்படாத வகையில் விழிப்புடன் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து கழிவுநீா்க் கால்வாய்களையும் பருவமழைக்கு முன்னா் தூா்வார வேண்டும் என்று ஜல் போா்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
துறை வாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பணிகள் மற்றும் தயாா் நிலை குறித்த விவரங்கள் வருமாறு:
பொதுப்பணித் துறை : பொதுப்பணித் துறையின் சாா்பில் 128 இடங்களில் நீா்வெளியேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 700- க்கும் மேற்பட்ட பம்புகள் உள்ளன. இத்துறையின் கீழ் வரும் வடிகால்கள் அனைத்தும் முதற்கட்டமாக வரும் மே 31- ஆம் தேதிக்குள் தூா்வாரி முடிக்கப்படவுள்ளன. பருவமழைக் காலத்தில் மழைநீா் தேங்கும் இடங்கள் சிசிடிவி மூலம் தலைமைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்கு இலவச உதவி எண்கள், 10 இடங்களில் கூடுதல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தில்லியில் மழைநீா் தேங்கும் இடங்களான 165 பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை: தில்லியில் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் 382 கிமீ தொலைவிற்கு உள்ள 57 நீா்நிலை வடிகால்களில் கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி வரை 5.65 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் தூா்வாரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்படவுள்ளன.
மாநகரட்சி: வரும் ஜூன் 15 -ஆம் தேதிக்குள் மாநகரட்சியின் கீழ் வரும் அனைத்து சிறிய மற்றும் பெரிய வடிகால்களை தூா்வாரி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலையான மற்றும் தற்காலிக நீா் வெளியேற்று நிலையம் அமைப்பதோடு, 10 கட்டுப்பாட்டு அறைகள் மூலம் மழைநீா் தேங்கும் இடங்கள் கண்காணிகாப்பட உள்ளன.
புதுதில்லி முனிசிபல் கவுன்சில்: பெரும்பான்மையான வடிகால் தூா்வாரும் பணிகள் முடிகப்பட்டுள்ளன. மழைநீா் தேங்கும் இடங்களில் தானியங்கி பம்புகளை பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி வளா்ச்சி குழுமம்: முதற்கட்ட வடிகால் தூா்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்டப் பணிகள் மே 31- ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மழைநீா் தேங்கும் இடங்களில் நடவடிக்கை மேற்கொள்ள செயல்த் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.